வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’ திரைப்படத்தின் வெற்றிக்காக, சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது.
வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தின் வெற்றிக்காக நடைபெற்ற இந்த வழிபாட்டில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் டாக்டர் ஆர்த்தி கணேஷ், படத்தின் இணைத் தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இந்த ஆன்மிக நிகழ்வின் ஒரு பகுதியாக, ஆலயத்திற்கு வருகை தந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பெண்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டன. திரைப்படத்தின் வெற்றியுடன், வேல்ஸ் நிறுவனத்தின் அடுத்தடுத்த திரைப்பட முயற்சிகளும் சிறப்பான வெற்றியைப் பெற வேண்டும் எனப் பிரத்தியங்கிரா தேவி அம்மனிடம் வேண்டிக்கொள்ளப்பட்டது.
சுந்தர்.சி இயக்கத்தில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ளார். ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, துனியா விஜய், சுனில், கருடா ராம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நம்பிக்கை, குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’, தமிழ் சினிமா ரசிகர்களைத் தாண்டி இந்திய அளவிலான ரசிகர்களையும் சென்றடையும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.






