தீபாவளித் திருநாளை முன்னிட்டு, எதிர்வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த விழாவுக்கு, படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் பேசுகையில், இப்படத்தில் சூர்யாவை மிகவும் வித்தியாசமான கோணத்தில் பார்க்கப் போவதாகவும், இது செம காமெடியாகவும், த்ரில்லராகவும்,முழுமையான மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னராக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், ழகரம் ஸ்டுடியோஸ் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்டது என்றும், இயக்குநர் ஜித்து மாதவன் கதையைச் சொன்னபோதே தாங்கள் சிரித்துக்கொண்டே இருந்தோம் என்றும் கூறினார்.
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ தாமோதரன் பேசுகையில், நல்ல படைப்புகளை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சூர்யாவின் கனவின் தொடக்கமே ‘சீன்’ திரைப்படம் என்றார். கேரளாவில் இருந்து வந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் சென்னைக்கு வந்து ஓராண்டு தங்கி அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்கியுள்ளதாகவும், சமூக ஊடகங்களில் பிரபலமான திறமை வாய்ந்த இளம் கலைஞர்களுக்கு இப்படத்தில் வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நடிகர் ராஜ் பிரியன் பேசுகையில், தனது சொந்த ஊர் தேவகோட்டை என்றும், சிறுவயதில் சூர்யாவின் ‘வேல்’ படப்பிடிப்பின்போது அவரைச் சந்தித்ததாகக் கூறினார். சினிமா மீது ஆர்வம் இல்லாமல் சமூக ஊடகங்களில் இமிடேட் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்த தன்னை, இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தில் நடிக்கத் தேர்வு செய்ததாகத் தெரிவித்தார். சூர்யாவின் தீவிர ரசிகரான தனக்கு அவருடன் இணைந்து நடிப்பதும், இசையமைப்பாளர் சுசின் ஷ்யாம் இசையில் பாடல்களை எழுதியதும் பாடியதும் மறக்க முடியாத தருணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நடிகர் டிராவிட் செல்வம் பேசுகையில், 2013-ல் சூர்யா படத்தின் முதல் நாள் காட்சியைப் பார்க்க திரையரங்கின் படிக்கட்டில் அமர்ந்து பார்த்த தான், இன்று அதே சூர்யாவுடன் பணியாற்றுவது எமோஷனலாக இருப்பதாகத் தெரிவித்தார். தன் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் ஜித்து மாதவனுக்கும், சமூக ஊடகத் திறமைசாலிகளைத் தேர்வு செய்த படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்த அவர், நஸ்லென் நடிப்பில் சூறாவளியாக கலக்கியிருப்பதாகப் பாராட்டினார்.
விநியோகஸ்தர் சக்தி வேலன் பேசுகையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டுடியோ கிரீன் மூலமாக சூர்யாவைச் சந்தித்ததிலிருந்து அவரது நிழலில் வளர்ந்ததாகக் கூறினார். ‘சிங்கம் 2’ வெற்றியின்போது சூர்யா தனக்கு 10 இலட்சம் ரூபாய் பரிசளித்து உழைப்பை அங்கீகரித்ததை நினைவு கூர்ந்தார். சூர்யா தொடர்ந்து நல்ல விஷயங்களைச் செய்வதை சிலர் அரசியலாக்குவதாகவும், அவர் எந்தவித அரசியல் நோக்கத்திற்காகவும் இதைச் செய்யவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். ‘சீன்’ ஒரு பெர்ஃபெக்ட் க்ரைம் த்ரில்லர் காமெடி படம் என்றும், இரண்டாம் பாதியில் ஐந்துக்கும் மேற்பட்ட திரையரங்கத் தருணங்கள் (Theatrical Moments) இருக்கும் என்றும் கூறினார்.
நடிகர் ஆனந்தராஜ் பேசுகையில், இப்படத்தில் தான் சூர்யாவிற்குத் தந்தையாக நடித்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். படத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசக் கட்டுப்பாடுகள் இருப்பதாகவும்,இயக்குநர் ஜித்து மாதவனுக்கும் சூர்யாவிற்கும் இப்படம் ஹாட்ரிக் வெற்றியைத் தரும் என்றும் வாழ்த்தினார்.
நடிகர் நஸ்லென் பேசுகையில், இதுவே தனது முதல் தமிழ் திரைப்படம் என்றும், ரசிகர்கள் காட்டும் பேரன்பு தன்னை நெகிழச் செய்வதாகவும் கூறினார். நவம்பர் 6-ஆம் தேதிக்குப் பிறகும் இதே அன்பு தொடரும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் பேசுகையில், இது தனது முதல் தமிழ் திரைப்படம் என்றும், ‘தி ஒன்’ சூர்யாவுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும் குறிப்பிட்டார். அனைவரும் கடுமையாக உழைத்துள்ளதால் படம் அனைவரையும் கவரும் என்றார்.
நடிகை நஸ்ரியா நஜீம் பேசுகையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரீஎன்ட்ரி கொடுப்பதற்கு முதல் காரணம் சூர்யா அண்ணாதான் என்றும், தனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது என்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தமிழ் ரசிகர்களின் அன்பு தனக்கு எப்போதுமே பிடிக்கும் என்றும், நவம்பர் 6-ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நடிகர் கார்த்தி பேசுகையில், தீபாவளி ரிலீஸ் எப்போதும் ஸ்பெஷலானது என்று குறிப்பிட்டு, ‘காக்க காக்க’, ‘பிதாமகன்’,’ஆய்த எழுத்து’ படங்களில் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பைப் சிலாகித்துப் பேசினார். ‘ஆவேஷம்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஜித்து மாதவன் முற்றிலும் புதுமையான டார்க் ஹியூமர் ஜானரில் இந்தப் படத்தை இயக்கியுள்ளதால், இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று தெரிவித்தார். மேலும், சூர்யா தொடர்ந்து கடினமாக உழைத்து அனைவரையும் உயரத்திற்கு அழைத்துச் செல்வது பெருமையளிக்கிறது என்றார்.
இயக்குநர் ஜித்து மாதவன் பேசுகையில், படத்தைப் பற்றி ஆன்லைனில் பல செய்திகள் வந்தாலும்,வெளியிடப்பட்டுள்ள மூன்று டீசர்கள் மற்றும் ஒரு ட்ரெய்லரை மட்டும் பார்த்துவிட்டு தியேட்டருக்கு வாருங்கள் என்றார்.எங்களைப் போன்றவர்கள் என்னதான் பிளான் செய்தாலும் இறுதியில் கலகலப்பாகத்தான் இருக்கப் போகிறோம் என்று நகைச்சுவையோடு குறிப்பிட்ட அவர், நவம்பர் 6-ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளில் தீபாவளியைக் கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்தார்.
நடிகர் சூர்யா பேசுகையில், தனது முதல் படத்திற்கு இசையமைத்த தேவா சாரை நன்றியுடன் நினைவுகூர்ந்ததோடு, 28 ஆண்டுகளாகத் தன் மீது அன்பு காட்டிவரும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். நற்பணி மன்றங்கள் மற்றும் இரத்த தான முகாம்கள் மூலம் தன் குடும்பத்தினர் சமூகத்திற்குச் செய்யும் நன்மைகளைப் பெருமையுடன் பகிர்ந்துகொண்டார். இந்த ஆண்டு தனக்கு மிகவும் ஸ்பெஷலானது என்றும், ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வரிசையில் ‘சீன்’ திரைப்படமும் முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்றும் கூறினார். தற்போதைய தனது படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்த நடிகர் தனுசுக்கு நன்றி தெரிவித்த அவர், வாழ்க்கை மீது நம்பிக்கை வையுங்கள் என்றும், மூச்சு விடும் வரை தோல்வி என்பதே கிடையாது, எதையும் எப்போது வேண்டுமானாலும் சரிசெய்ய இயலும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.