‘செய் செய்யாதே’ – திரைப்பட விம்ர்சனம்

7

ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, இசையமைத்துள்ள திரைப்படம் ‘செய் செய்யாதே’. டாக்டர் சந்திரபோஸ் என்ற நேர்மையான மருத்துவராக டாக்டர் எஸ். ராஜா நடித்துள்ளார். அவருடன் குரு விஜய், தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி, சிதம்பரம் PDK உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் கதாபாத்திரத்தில் ஹெச். ராஜா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதும் படத்தின் கவனிக்கத்தக்க அம்சம்.

கதை

மதுரையில் அரசு மருத்துவமனையின் டீனாகப் பணியாற்றும் டாக்டர் சந்திரபோஸ், மருத்துவத்தைத் தொழிலாகப் பார்க்காமல் சேவையாகக் கருதும் நேர்மையான மருத்துவர். ஏழை மக்களுக்கு உதவுவதையும், நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதையும் தனது கடமையாகக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது மகன் டாக்டர் விஜய்யோ இதற்கு நேர்மாறாக, மருத்துவத்தைப் பணம் சம்பாதிக்கும் வழியாகப் பார்க்கிறார். தனியார் மருத்துவமனையை நிர்வகிக்கும் அவர், பணத்திற்காகப் பல தவறான செயல்களில் ஈடுபடுகிறார்.

இதற்கிடையே, இளம் வயதினர் சிலர் திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. அவற்றின் பின்னணியை மருத்துவ ரீதியாக ஆராயும் சந்திரபோஸுக்கு அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரிய வருகின்றன. மருத்துவத் துறையில் வேரூன்றியிருக்கும் முறைகேடுகள், பணத்திற்காக நோயாளிகளைப் பயன்படுத்தும் மருத்துவ மாஃபியாக்கள் எனப் பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளிவருகின்றன. இதன் பின்னணியில் இருப்பவர்களை அவர் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

திரைக்கதை – மருத்துவ உலகின் மறுபக்கம்!

மருத்துவம் என்பது உயிரைக் காப்பாற்றும் சேவையா, இல்லை பணம் சம்பாதிக்கும் வணிகமா என்ற முக்கியமான கேள்வியை முன்வைக்கிறது படம். தேவையற்ற பரிசோதனைகள், கட்டாயப்படுத்தப்படும் அறுவை சிகிச்சைகள், மருந்து விற்பனையில் நடைபெறும் முறைகேடுகள், மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ள பிரச்சினைகள் எனப் பல விஷயங்களைத் துணிச்சலாகப் பேசுகிறது.

குறிப்பாக, மருத்துவத் துறையில் பணத்திற்காக சிலர் செய்யக்கூடிய தவறுகளைப் பார்க்கும்போது, சாதாரண நோயாளிகள் எந்த அளவுக்கு ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது என்ற அச்சம் ஏற்படுகிறது. சில காட்சிகள் பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் அமைந்துள்ளன. கொரோனா காலகட்டத்தில் மருத்துவத் துறையைச் சுற்றி எழுந்த சர்ச்சைகளையும் படம் தொட்டுச் செல்கிறது.

இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா உண்மையான மருத்துவப் பின்னணியைக் கொண்டிருப்பதால், மருத்துவம் தொடர்பான விவரங்களையும் விளக்கங்களையும் காட்சிகளில் விரிவாகக் கொண்டுவந்திருக்கிறார். அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களின் சேவையை நேர்மறையாகப் பதிவு செய்திருப்பதும் பாராட்டுக்குரியது.

ஆனால், இத்தனை முக்கியமான பிரச்சினைகளை ஒரே படத்தில் பேச வேண்டும் என்ற முயற்சி சில இடங்களில் திரைக்கதையின் இயல்பான ஓட்டத்தைப் பாதிக்கிறது. காட்சிகள் வழியாக உணர்த்த வேண்டிய கருத்துகள் நீண்ட வசனங்களாகவும் விளக்கங்களாகவும் வருவதால், சில பகுதிகள் ஆவணப்படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகின்றன. விசாரணை தொடர்பான காட்சிகளில் இன்னும் சஸ்பென்ஸும் விறுவிறுப்பும் இருந்திருக்கலாம். இரண்டாம் பாதியில் கதை சற்று மெதுவாக நகர்வதும், சில இடங்களில் சீரியல் பாணி எட்டிப்பார்ப்பதும் பலவீனம்.

நடிப்பு

நேர்மையான மருத்துவர் சந்திரபோஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டாக்டர் எஸ். ராஜா, அமைதியான உடல்மொழியுடனும் இயல்பான நடிப்புடனும் கவனம் ஈர்க்கிறார். நோயாளிகளிடம் அவர் காட்டும் அக்கறை, மருத்துவத் துறையில் நடக்கும் தவறுகளை எதிர்க்கும் காட்சிகள் ஆகியவை படத்தின் பலமான பகுதிகள்.

மகனாக வரும் குரு விஜய், பணத்திற்காகத் தவறான பாதையில் செல்லும் மருத்துவராக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் கதைக்கு முக்கியமான மோதலை உருவாக்குகிறது. தந்தையின் நேர்மைக்கும் மகனின் பேராசைக்கும் இடையிலான முரண்பாடு இன்னும் ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் தாக்கம் அதிகரித்திருக்கும்.

தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் பொருந்துகின்றனர். ஹெச். ராஜா தமிழக முதலமைச்சராகச் சிறப்புத் தோற்றத்தில் வரும் காட்சிகள் படத்திற்கு அரசியல் கவனத்தையும் கூடுதல் பரபரப்பையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அவரது வசனங்களும் நடவடிக்கைகளும் கதையின் கருத்துக்கு வலு சேர்க்கின்றன.

தொழில்நுட்பம்

ராம்நாடு வாசு பி.யின் ஒளிப்பதிவு கதையின் தேவைக்கேற்ப அமைந்துள்ளது. டாக்டர் எஸ். ராஜாவின் இசையும் பின்னணி இசையும் காட்சிகளுக்குத் துணையாகப் பயணிக்கின்றன. ராஜா முகமதுவின் படத்தொகுப்பில் இன்னும் சில காட்சிகள் குறைக்கப்பட்டிருந்தால் படத்தின் வேகமும் விறுவிறுப்பும் அதிகரித்திருக்கும்.

பிளஸ்

மருத்துவத் துறையின் மறுபக்கத்தைப் பேசும் துணிச்சலான கதைக்களம், மருத்துவ முறைகேடுகள் குறித்த விரிவான தகவல்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் அணுகுமுறை, டாக்டர் எஸ். ராஜாவின் நேர்மையான மருத்துவர் கதாபாத்திரம் ஆகியவை படத்தின் முக்கியமான பலங்கள்.

மைனஸ்

அதிகப்படியான விளக்க வசனங்கள், சில இடங்களில் மெதுவாக நகரும் திரைக்கதை, உணர்வுபூர்வமாக முழுமையடையாத தந்தை – மகன் மோதல், விறுவிறுப்பு குறையும் விசாரணைக் காட்சிகள் ஆகியவை படத்தின் தாக்கத்தைக் குறைக்கின்றன. சில காட்சிகள் இன்னும் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் அமைந்திருக்கலாம்.

இறுதியாக…

சமூகத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாகியுள்ள படம் ‘செய் செய்யாதே’. மருத்துவத் துறையில் நடைபெறும் தவறுகளையும், பணத்திற்காக நோயாளிகளின் அச்சத்தையும் தேவையையும் பயன்படுத்திக்கொள்ளும் சிலரின் செயல்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. சொல்ல வந்த கருத்தில் இயக்குநருக்கு இருக்கும் தெளிவு பாராட்டுக்குரியது. ஆனால் அந்தக் கருத்துகளை விறுவிறுப்பான சினிமா அனுபவமாக மாற்றுவதில் சில குறைகள் இருக்கின்றன.

மருத்துவத் துறையின் மறுபக்கத்தை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், சமூக அக்கறை கொண்ட படங்களைப் பார்ப்பவர்களுக்கும் ‘செய் செய்யாதே’ ஒரு கவனிக்கத்தக்க திரைப்படம். நல்ல கருத்து இருக்கிறது; அதை இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கலாம்!

மதிப்பீடு: 2.5 / 5