மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான பஸில் ஜோசப் மற்றும் ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ராவடி’ (Raawadi). விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘அட்ரா பரமா’ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘ராவடி’ திரைப்படத்தில் பஸில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார், ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் பி.ஏ., சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை பி.எஸ். ஹரிஹரன் கவனித்துள்ளார்.
கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்துள்ளார். எல்.கே. விஷ்ணுகுமார் இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். ஆடை வடிவமைப்பை பிரியா ரவி மேற்கொள்ள, நடன அமைப்பை எம். ஷெரிப் கவனித்துள்ளார். சண்டைப் பயிற்சியை டான் அசோக் அமைத்துள்ளார். ஒலி வடிவமைப்பை எஸ். அழகியகூத்தன் மற்றும் சுரேன் ஜி மேற்கொண்டுள்ளனர். ஒலி கலவைப் பணியை சுரேன் ஜி கவனித்துள்ளார்.
அறிவு குரலில் துள்ளலான முதல் பாடல்!
இப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘பொடி பொடியா அடிச்சது பொடியன் இல்ல பாத்துக்க பாத்துக்க…’ எனத் தொடங்கும் ‘அட்ரா பரமா’ பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. உதய் எழுதியுள்ள இப்பாடலைப் பின்னணிப் பாடகர் அறிவு பாடியுள்ளார். ஜென் மார்ட்டினின் துள்ளலான இசையில் உருவாகியுள்ள இப்பாடல் இளம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற ‘படிடா பரமா’ என்ற வசனம் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த எதிர்பார்ப்பைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ‘அட்ரா பரமா’ பாடலும் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
