காதல், நட்பு, மனித உறவுகள் என வார்த்தைகளால் முழுமையாக விவரிக்க முடியாத உணர்வுகளை இசையின் வழியாக வெளிப்படுத்தும் புதிய இசைப் படைப்பாக ‘இருவர்’ உருவாகியுள்ளது. ஸ்டோன்புரூக் பிலிம்ஸ் தயாரிப்பில், ‘ஜடா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் குமரன் இப்படைப்பை உருவாக்கி இயக்கியுள்ளார்.
இந்த இசைப் படைப்பின் சிறப்பம்சமாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். தனித்துவமான நடிப்புத் திறன் மற்றும் கதாபாத்திரத் தேர்வுகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துவரும் விஜய் சேதுபதி, இம்முயற்சியின் மூலம் பாடலாசிரியராகவும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
‘தெகிடி’, ‘சேதுபதி’, ‘ஓ மை கடவுளே’, ‘பைசன்’, ‘தாய்க்கிழவி’ உள்ளிட்ட படங்களில் தனது இசையால் கவனம் ஈர்த்த நிவாஸ் கே. பிரசன்னா, ‘இருவர்’ இசைப் படைப்புக்கு இசையமைத்துள்ளார். இப்பாடலை சூரஜ் சந்தோஷ் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளனர். அவர்களின் குரல்கள் பாடலின் உணர்வுகளுக்கு மேலும் உயிரூட்டும் வகையில் அமைந்துள்ளன.
திரைப்பட பாணியிலிருந்து மாறுபட்ட இசை முயற்சி!
‘ஜடா’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் குமரன் மேற்கொண்டுள்ள இந்தப் புதிய முயற்சி, வழக்கமான திரைப்படக் கதை சொல்லும் முறையிலிருந்து மாறுபட்டு, இசை, காட்சியமைப்பு மற்றும் உணர்வுகளின் வழியாகக் கதையைச் சொல்லும் வகையில் உருவாகியுள்ளது.
ஸ்டோன்புரூக் பிலிம்ஸ் சார்பில் வினோத் குமார், புஷ்பகலா மற்றும் குமரன் இணைந்து தயாரித்துள்ள இப்படைப்புக்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை தீபக் மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநராக ஜெய் முருகன் பணியாற்றியுள்ளார். கூடுதல் கீபோர்டு, ரிதம் புரொடக்ஷன் மற்றும் கூடுதல் மாஸ்டரிங் பணிகளை ஹெவின் பூஸ்டர் கவனித்துள்ளார்.
நிஷாந்த் நடன இயக்குநராகவும், புவனா மற்றும் தீபிகா ஆடை வடிவமைப்பாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர். நவநீத கிருஷ்ணன் விளம்பர வடிவமைப்பையும், முரளி புகைப்படப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். தயாரிப்பு மேலாளராக கோகுல், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்களாக நவீன், பிரவீன் மற்றும் கோபிநாத் திரவியம் பணியாற்றியுள்ளனர். வண்ணச் சேர்க்கையை சண்முகபாண்டியன் மேற்கொண்டுள்ளார். மக்கள் தொடர்புப் பணிகளை ரேகா கவனிக்கிறார்.
விஜய் சேதுபதியின் வரிகள், நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை, சூரஜ் சந்தோஷ் மற்றும் அதிதி ஷங்கரின் குரல்கள் எனப் பல திறமையான கலைஞர்கள் இணைந்துள்ள ‘இருவர்’ இசைப் படைப்பின் ஆடியோ மற்றும் லிரிக்கல் வீடியோ இன்று (நவம்பர் 4, 2026) சரிகமா ஒரிஜினல்ஸ் (Saregama Originals) வெளியீடாக வெளியானது.
