‘நடுவன்’ படத்தின் இயக்குநர் சரண் என்கிற ஷாரி இயக்கத்தில், நடிகர் ஹரிசங்கர் நாராயணன் மற்றும் ஷாரி இணைந்து உருவாக்கியுள்ள ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Hidden Talent Studios தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பம், ஒரு அழகான காதல் கதையைத் திரைப்படம் பார்க்கும் அனுபவத்துடன் ரசிகர்களுக்குக் கடத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்டி மியூசிக் தளத்தில் ஷாரி மற்றும் ஹரிசங்கர் நாராயணன் இணைந்து உருவாக்கியுள்ள முதல் இருமொழி ஆல்பமாக ‘நீயும் நானும்’ அமைந்துள்ளது. தமிழில் ‘நீயும் நானும்’ (Neeyum Naanum) என்றும், மலையாளத்தில் ‘ഞാനും’ (Njyaanum) என்றும் வெளியாகியுள்ள இந்த ஆல்பத்தை Saregama Music நிறுவனம் வெளியிட்டுள்ளது. இரு மொழிகளிலும் காதலின் அழகையும், பயணத்தின் அனுபவங்களையும் இசை வழியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது.
‘நடுவன்’ படத்தின் இயக்குநரும், ‘இனிது இனிது’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தவருமான சரண் என்கிற ஷாரி இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளார். ‘லேபிள்’, ‘கட்டாளன்’, ‘டோரதி’, ‘சிறை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஹரிசங்கர் நாயகனாகவும், சுஜா சுகுமார் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
ஷாரி மற்றும் ஹரிசங்கர் இருவரும் தங்களது பயணங்களின்போது சந்தித்த காதலர்களின் நினைவுகள், அப்போது தாங்கள் உணர்ந்த காதல் தருணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். பயணத்தில் சந்தித்த மனிதர்களின் உணர்வுகளையும், காதலின் அழகிய தருணங்களையும் ஒரு இசைக் கதையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான இந்தப் படைப்பு, கற்பனைக் காதல் கதையாக மட்டுமின்றி, நிஜப் பயண அனுபவங்களின் நினைவுகளையும் உணர்வுகளையும் சுமந்து நிற்கிறது.
பேசவும், கேட்கவும் முடியாத ஓர் இளைஞன், தனது காதலியின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக அவள் விரும்பும் இடங்களுக்கெல்லாம் அவளுடன் பயணம் மேற்கொள்கிறான். அந்தப் பயணத்தில் இருவருக்கும் இடையே மலரும் அன்பு, ஆசை, காதல் மற்றும் மென்மையான உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்பாடலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் யுதிஷ்டரன் (Yuthishtran E) இசையமைத்துள்ள இப்பாடலை ஹனன் ஷா (Hanan Shaah), நிஹால் சாதிக் (Nihal Sadiq) ஆகியோர் பாடியுள்ளனர்.
சென்னை, பெங்களூரு, கோவா, விமான நிலையம், ஜெய்ப்பூர், சண்டிகர், சிம்லா, சாங்லா, சிட்குல் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு அழகிய இடங்களில் இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளுக்குப் பயணித்து, ஒரு முழுநீளத் திரைப்படத்திற்கான காட்சியமைப்புகளுடன் இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இதுவரை பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஹரிசங்கர், இந்த ஆல்பத்தில் முற்றிலும் மாறுபட்ட காதல் நாயகனாகத் தோன்றியுள்ளார். காதல் உணர்வுகள், காதலியின் மீதான அன்பு, அவளது ஆசைகளை நிறைவேற்றும் தருணங்கள் என ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இணையாக நாயகி சுஜா சுகுமாரும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்.
ஒரு சாதாரண மியூசிக் வீடியோவாக இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வைத் தரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அழகான காதல் தருணங்களுடன் நகரும் இந்தப் பாடலின் இறுதியில் இடம்பெறும் எதிர்பாராத திருப்பம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
காதல், பயணம், இசை, அழகான காட்சிகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

