தொல். திருமாவளவன், மனோ உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற ‘மௌன மொழிகள்’ இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

18

ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட் (Sri Vaari Entertainment) சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.பி. பாலச்சந்திரன் மற்றும் பி. ஸ்ரீமன் தயாரிப்பில், இயக்குநர் ஏ.சி. சௌந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மௌன மொழிகள்’ (Mouna Mozhigal). பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீமன், திவ்யா, தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், அர்ஜுன், இளவரசு, அஞ்சலிதேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து மகிழக்கூடிய கலகலப்பான கமர்ஷியல் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘மௌன மொழிகள்’ உருவாகியுள்ளது. வரும் நவம்பர் 27-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் மற்றும் சமூக ஆளுமைகள், படக்குழுவினர் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், பிரபல பின்னணிப் பாடகர் மனோ, இசையமைப்பாளர் சிற்பி, தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஆர்.கே. அன்புசெல்வன், பாடகர் கானா பாலா, லியாகத் அலிகான், நடிகர் விஸ்வநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

விழாவில் பேசிய பாடகர் கானா பாலா, “ஷாகிர் மனோ இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். மனோ அண்ணன் சிறந்த பாடகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரது மகன் நடிப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்திற்காக நான் இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறேன். குறிப்பாக, இளைஞர்களைக் கவரும் வகையில் பாடல்களும் இசையும் அமைந்துள்ளன. மனோ அண்ணனின் மகன் என்பதற்காக மட்டுமே அவரைப் பாராட்டவில்லை. ஷாகிர் மனோவுக்கென்று தனிப்பட்ட திறமை இருக்கிறது. குடும்பப் பின்னணி வாய்ப்புகளைப் பெற்றுத் தரலாம்; ஆனால், திறமைதான் ஒருவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.

இசையமைப்பாளர் சிற்பி பேசும்போது, “‘மௌன மொழிகள்’ என்ற தலைப்பே மிகவும் அழகாக இருக்கிறது. மௌனம் என்பது பல நேரங்களில் மிகப்பெரிய ஆயுதமாக அமையும். மனோ சார் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய அற்புதமான கலைஞர். அவரது மகன் ஷாகிர் மனோ ஏற்கெனவே ‘பட்டாக்கத்தி’ படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்திலும் நடனம், உணர்வுகள், ஆக்ஷன் எனப் பல்வேறு பரிமாணங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் சிறந்த கதாநாயகனாக வளர வேண்டும். படத்தின் கதை மற்றும் உள்ளடக்கம் நன்றாக இருந்தால்தான் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவார்கள். அந்த வகையில் ‘மௌன மொழிகள்’ வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார்.

பிரபல பின்னணிப் பாடகர் மனோ பேசுகையில், “எவ்வளவோ ஆசைகளுடனும் கனவுகளுடனும் பல மாதங்கள் கடினமாக உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருப்பார்கள். ஒரு திரைப்படத்தின் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். எனவே, ஊடக நண்பர்கள் இந்தப் படக்குழுவினருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் ஆதரவின் மூலம் இந்தத் திரைப்படம் மக்களிடம் சென்றடையும். படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஆர்.கே. அன்புசெல்வன் பேசும்போது, சிறு முதலீட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் குறித்த முக்கியமான கோரிக்கையை முன்வைத்தார். “தமிழகத்தில் சிறிய திரைப்படங்களுக்கான அரசு மானியத் திட்டம் 1989-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. தற்போது ஆண்டுக்கு 28 திரைப்படங்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சிறிய திரைப்படங்கள் தயாராகும் நிலையில், குறைந்தது 100 திரைப்படங்களுக்காவது அரசு மானியம் வழங்க வேண்டும். ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பெறுகிறதா என்பதைத் தாண்டி, அரசிடமிருந்து கிடைக்கும் ஏழு லட்சம் ரூபாய் மானியம் சிறிய தயாரிப்பாளர்களின் குடும்பங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கும். சிறிய படங்களுக்கும் ஆதரவு அளித்து தயாரிப்பாளர் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இசையமைப்பாளர் நள இளந்திரையன் பேசுகையில், இப்படத்தின் பாடல்களுக்காகப் படக்குழுவினர் மேற்கொண்ட உழைப்பைப் பகிர்ந்துகொண்டார். இயக்குநர் ஏ.சி. சௌந்தர் இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக நன்றி தெரிவித்த அவர், நண்பர் சௌந்தரராஜனுடன் இணைந்து பத்து நாட்களுக்கும் மேலாகப் பாடல்களுக்கான இசையமைப்புப் பணிகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார்.

இயக்குநர் ஏ.சி. சௌந்தர் பேசும்போது, “இந்த மேடையில் நான் நிற்பதற்கு முக்கியக் காரணம் தயாரிப்பாளர்தான். அவர் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை உருவாக்க வாய்ப்பளித்தார். மீடியம் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். அதற்கு ஊடக நண்பர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். இந்தப் படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாகப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, ஊடக நண்பர்களும் ரசிகர்களும் ஆதரவு அளித்து திரையரங்குகளில் படத்தைப் பார்த்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். அடுத்ததாக ‘இதயத்தில் காதல்’ என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறேன்” என்று தெரிவித்தார்.

விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தொல். திருமாவளவன் பேசுகையில், ‘மௌன மொழிகள்’ என்ற அழகான தமிழ்த் தலைப்பைத் தேர்வு செய்த இயக்குநர் ஏ.சி. சௌந்தரைப் பாராட்டினார். “தமிழில் திரைப்படங்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம். அந்த வகையில் ‘மௌன மொழிகள்’ என்பது கவித்துவமான தலைப்பு. பிரபல பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ சிறு முதலீட்டில் உருவாகும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பெரிய முதலீட்டுப் படங்களுடன் போட்டியிடுவது கடினமான சூழலில், தயாரிப்பாளர்கள் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது” என்றார்.

மேலும், திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குத் துறையாக மட்டுமின்றி, சமூக மாற்றத்திலும் அரசியல் களத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை கொண்டவை என்று குறிப்பிட்ட அவர், ‘ரத்தக்கண்ணீர்’, ‘தண்ணீர் தண்ணீர்’ போன்ற திரைப்படங்கள் வணிகத்தைக் கடந்து சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் சுட்டிக்காட்டினார். சாதிப் பெருமிதம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு இடமளிக்காமல், சமூக சமத்துவம், பெண்களின் ஆளுமை, ஜனநாயகச் சிந்தனை ஆகியவற்றை முன்னிறுத்தும் படைப்புகள் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காதல் மனித வாழ்வியலோடு இயல்பாக இணைந்திருக்கும் உணர்வு என்றும், சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய திரைப்படங்கள் வரை தொடர்ந்து பேசப்பட்டு வரும் காதல், எதிர்காலத்திலும் பல்வேறு கோணங்களில் படைக்கப்படும் என்றும் தெரிவித்தார். திரைப்படங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வணிகமாக இல்லாமல், சமூக முன்னேற்றத்திற்கும் மாற்றத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்றும் இளம் இயக்குநர்கள் அந்தப் புரிதலுடன் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சிறு முதலீட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக ஆண்டுதோறும் குறைந்தது 100 படங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற ஆர்.கே. அன்புசெல்வனின் கோரிக்கையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முயற்சி செய்வதாகவும் உறுதியளித்தார். புதிய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்குவதற்குத் தேவையான ஆதரவு கிடைக்க வேண்டும் என்றும் கூறி, ‘மௌன மொழிகள்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இப்படத்திற்கு ஏ.சி. சௌந்தர் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளதுடன் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். நள இளந்திரையன் இசையமைத்துள்ளார். எம்.ஜி. ராய் ஒளிப்பதிவு செய்ய, சேது ரமணா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். டான் பாலா கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டைப் பயிற்சியையும், விஜய் முருகன் வடிவமைப்புப் பணிகளையும் கவனித்துள்ளனர். பி. வேலுமணி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை சரண் மேற்கொள்கிறார்.

காதல், நகைச்சுவை கலந்த வண்ணமயமான பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘மௌன மொழிகள்’ வரும் நவம்பர் 27-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.