தனது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தைப் படமாக்கிய K.P. ஜெகன்… ‘ஜெயில் மேட்ஸ்’ டைட்டில் டீசர் வெளியீடு!

20

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் K.P. ஜெகன். மேலும், ‘மிக மிக அவசரம்’ திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியதுடன், பத்து இயக்குநர்கள் இணைந்து நடித்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர். இவரது அடுத்த படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates).

தென்னிந்தியத் திரையுலகில் முதன்முறையாக மெட்டா சினிமா (Meta Cinema) பாணியில் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் தனிச்சிறப்பாக, இயக்குநர் K.P. ஜெகன் தனது சொந்தப் பெயரிலேயே, இயக்குநர் ஜெகனாகத் திரையில் நடித்துள்ளார். 2017-ம் ஆண்டு அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஜய் வர்மா மற்றொரு கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘வடம்’ திரைப்படத்தில் நடித்த சனாஷ்கா ஸ்ரீ நடித்துள்ளார். மேலும், மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, ‘உறியடி’ சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர், சிவனடியார் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு பாடலையும், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா மற்றும் இயக்குநர் திரைவண்ணன் இணைந்து ஒரு பாடலையும் எழுதியுள்ளனர். அறிமுகப் பெண் கவிஞர் சக்தி உமா பாலகிருஷ்ணா மற்றொரு பாடலை எழுதியுள்ளார். குறிப்பாக, மறைந்த தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் கடைசியாகப் பாடிய மனதை உருக்கும் ஆன்மீகப் பாடல் ஒன்றும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிமுக ஒளிப்பதிவாளர் சுக செல்வம் ஒளிப்பதிவைக் கையாள, மணிகண்டன் சிவக்குமார் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை வீரசமர் கவனித்துள்ளார். இப்படத்தின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சமாக, இரண்டாம் பாதியின் பெரும்பாலான காட்சிகள் இயற்கையாகப் பெய்த மழையிலேயே படமாக்கப்பட்டுள்ளன.

யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தயாரிப்பு மேலாண்மையை சாமுவேல் சிவராஜ் மேற்கொண்டுள்ளார். முழுப் படமும் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

எதார்த்தமான நகைச்சுவையுடன் திரில்லர் அம்சங்களும் கலந்து உருவாகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. படத்தைப் பார்த்த இயக்குநர்கள் பாண்டிராஜ் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் படத்தின் மீது நம்பிக்கை தெரிவித்து, தங்களது நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வெளியிட முன்வந்துள்ளனர்.

வழக்கமான திரைப்பட உருவாக்க முறையிலிருந்து மாறுபட்டு, இயக்குநர் தனது சொந்த வாழ்க்கைச் சம்பவத்தையும், திரையில் தனது அடையாளத்தையும் இணைத்து உருவாக்கியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’, மெட்டா சினிமா என்ற புதிய முயற்சியின் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் திரையரங்க வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.