‘லவ் மேட்டர்’ படத்திற்காக இரண்டு பாடல்கள் பாடிய ‘லுங்கி பாய்ஸ்’ ராஜ்பிரியன்!

13

ஹை கிரியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் செல்வ அன்பரசன் தயாரிப்பில், மகாதாரா பகவத் இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘லவ் மேட்டர்’. GenZ தலைமுறையினரின் காதல் மற்றும் வாழ்க்கை குறித்த புரிதல்களை அவர்களுக்குப் பிடித்தமான பாணியில் பேசும் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

“காதலிக்கும் போது வாழ்க்கை புரியாது; வாழ்க்கை புரியும் போது காதல் இருக்காது. இந்த இரண்டையும் தெளிவாகப் புரிந்துகொண்டு வாழ வேண்டும்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ‘லுங்கி பாய்ஸ்’ புகழ் ராஜ்பிரியன் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். அதில், “கெஞ்சி கெஞ்சி கெஞ்சி தம்பி நல்லா கெஞ்சி, கஞ்சி கஞ்சி கஞ்சி லவ் பண்ணா நீ கஞ்சி” என்று தொடங்கும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து மற்றொரு பாடலையும் அவர் பாடவுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘ஆரம்பம் ஆரம்பம்’ பாடலைப் பிரபல பாடகர் எஸ்.என். சுரேந்தர் பாடியுள்ளார்.

இப்படத்தின் மூலம் இயன் கதாநாயகனாகவும், அபிநயா கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் இயக்குநர் ரஞ்சித் ராகவா, ராயல் பிரபாகர், அச்சாரம் சேகர், ஸ்ரீவி, திலீப், RJ பொற்கொடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவரான மகாதாரா பகவத் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். சமூக வலைதளங்களில் நாய் குறித்த வீடியோக்கள் மூலம் அறியப்படும் ‘அன்பு சார்’ என்கிற செல்வ அன்பரசன் இப்படத்தைத் தயாரிக்கிறார். இவரும் திரைப்படக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்தின் இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் என்பது இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

GenZ தலைமுறையின் காதல், வாழ்க்கை மற்றும் உறவுகள் குறித்த பார்வையை நகைச்சுவையும் இசையும் கலந்து சொல்ல வருவதால், ‘லவ் மேட்டர்’ திரைப்படம் இளம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.