“கரிசல் மண்ணின் பின்னணியில் கவுதம் ராம் கார்த்திக் – யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் ‘செங்குலம்’ டைட்டில் போஸ்டர், கிளிம்ப்ஸ் வெளியீடு!”

8

கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group) சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

கண்ணன் ரவி குழுமம் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருவதுடன், புதிய திறமையாளர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறது. அந்த வகையில், அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தின் தலைப்பை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், ரத்தம் தோய்ந்த வேல்கம்பு, அதைச் சுற்றியுள்ள சிவப்பு நிறத் துணிகள், கரிசல் மண் மற்றும் புழுதி எனப் படத்தின் ‘செங்குலம்’ தலைப்புக்கு ஏற்ற அதிரடியான பின்னணி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பையும் போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவும் தனித்துவமான காட்சியமைப்பால் கவனம் ஈர்த்துள்ளது. கரிசல் காட்டின் மண்ணில் வைக்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற வளையலை நோக்கி, ரத்தம் தோய்ந்த வேல்கம்பு ஒன்று வேகமாகப் பாய்ந்து வந்து தாக்குகிறது. அதில் வளையல் உடைந்து சிதற, அந்தச் சிதறல்களுக்கு மத்தியில் ‘செங்குலம்’ என்ற படத்தின் தலைப்பு அதிரடியாகத் தோன்றுகிறது. மேலும், அந்த இடத்தைச் சுற்றிலும் காணப்படும் கால்தடங்கள் மற்றும் செருப்புத் தடங்கள் என ஒவ்வொரு காட்சியும் படத்தின் பின்னணி குறித்த ஆர்வத்தையும் கேள்விகளையும் எழுப்பும் வகையில் அமைந்துள்ளன. இந்த வித்தியாசமான கிளிம்ப்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு கிஃப்ட்சன் ராபர்ட் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். மோகன் மற்றும் வைர பாலன் கலை இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர். தமிழ் அரசன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். ஹெட் ஆஃப் ஆபரேஷன்ஸ் ஆக ஸ்ரீநாத் விஸ்வநாதன், சண்டைப் பயிற்சி இயக்குநராக மகேஷ் மேத்யூ, போஸ்டர் வடிவமைப்பாளராக மோனிக் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி, தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காஷ்மீரிலும் நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் ‘செங்குலம்’ திரைப்படம் 2027-ம் ஆண்டு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் மூலம் கவனம் ஈர்த்துள்ள இப்படம், கவுதம் ராம் கார்த்திக்கின் திரைப்பயணத்தில் முக்கியமான படைப்பாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.