“ஒரே இரவில் நடக்கும் காதல் – கிரைம் – ஆக்ஷன் திரில்லர்… அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் ‘ஸ்டேஷன்’!”
‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அஜய் கார்த்தி மற்றும் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’ (STATION – Hunt For Survival). கேபி இன்போடெயின்மென்ட் (KP INFOTAINMENT) தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் எழுதி இயக்கும் இப்படத்தை கே. தினேஷ் குமார் தயாரிக்கிறார். ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு காதல், குற்றம், சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி எனப் பல அம்சங்கள் கலந்த திரில்லர் திரைப்படமாக ‘ஸ்டேஷன்’ உருவாகி வருகிறது. சென்னையின் முக்கியப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் அஜய் கார்த்திக்கு ஜோடியாக தீபா பாலு துடிப்பான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரபல இயக்குநரும் நடிகருமான ஏ. வெங்கடேஷ், மலையாளத் திரைப்படமான ‘திரிடம்’ (Dridam) மூலம் கவனம் ஈர்த்த தினேஷ் பிரபாகர், பாலஹாசன், ரமேஷ் திலக், மூணார் ரமேஷ், ஜெய் கிருஷ்ணா, வாழை ஜானகி, மெட்ராஸ் ரமா, அனு ஸ்ரீ வேலன், பிரகாஷ், சோபியா மற்றும் சப்பாணி பாய்ஸ் முரளி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘ஸ்டேஷன்’ திரைப்படத்தின் மொத்தக் காட்சிகளில் சுமார் 70 சதவீதம் காவல் நிலையத்தை மையமாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. இதற்காகச் சென்னையில் உள்ள பிரபல திரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரியில் பிரம்மாண்டமான காவல் நிலைய அரங்கம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகள் இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் அமைய வேண்டும் என்பதற்காக இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டு, அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
வலுவான தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இப்படம் உருவாகி வருகிறது. ஒளிப்பதிவை சுபாஸ் பாரதி மேற்கொள்ள, அருண் ராஜ் இசையமைக்கிறார். அய்யப்பன் S கலை இயக்கத்தையும், பிரபு ஜாக்கி சண்டைப் பயிற்சியையும் கவனிக்கின்றனர். தினேஷ் பாபு G V ஆடை வடிவமைப்பாளராகவும், முத்தையன் U படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
மேலும், நிர்வாகத் தயாரிப்பை விக்கி ஆண்ட்ரு மேற்கொள்கிறார். VFX மேற்பார்வையை சரவண பாலாஜி K – Time Stone FX நிறுவனம் கவனிக்கிறது. மார்க்கெட்டிங் பணிகளை Digitally Powerful மேற்கொள்ள, மக்கள் தொடர்புப் பணிகளை சதீஷ் குமார் – S2 Media கவனிக்கின்றனர்.
புதிய கோணங்களிலும் வித்தியாசமான கதைக்களங்களிலும் திரைப்படங்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் KP INFOTAINMENT நிறுவனம், ‘STATION – Hunt For Survival’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடர்கிறது. ஒரே இரவில் நடக்கும் கதைக்களம், காவல் நிலையத்தை மையமாகக் கொண்ட பெரும்பாலான காட்சிகள், காதல், குற்றம், சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி எனப் பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி வரும் இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Photo Gallery :






