4 கதாநாயகர்கள், 6 கதாநாயகிகள்… நட்பு, காதல், ஆக்ஷன் என கலகலப்பாக உருவாகும் புதிய திரைப்படம் – பாடல் பணிகள் நிறைவு!
18 ஸ்டெப்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் பிரியங்கா நாராயணன் தயாரிப்பில், நான்கு கதாநாயகர்கள் மற்றும் ஆறு கதாநாயகிகள் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் பாடல் பணிகள் நிறைவடைந்துள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராணவ், ‘சிறகடிக்க ஆசை’ தொடர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மனோஜ் ஸ்ரீதேவா, சீயானே வினோத், ஹர்ஷித் ரெட்டி ஆகிய நால்வரும் இப்படத்தில் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். நண்பர்களின் வாழ்க்கை, நட்பு மற்றும் அதன் தனித்துவமான உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.
‘டகால்டி’ படத்தின் நாயகி ரித்திகா சென், ‘சபாபதி’ படத்தின் நாயகி ப்ரீத்தி வர்மா, பாலிவுட் மாடல் இஷாத்தா சிங் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், இயக்குநர் பாண்டியராஜன், கஜராஜ், தயாரிப்பாளர் மூர்த்தி, பரிவு சக்திவேல், ‘ஊமை விழிகள்’ அரவிந்த்ராஜ், ஆர்யன், அனுபமா குமார், ரஞ்சனா நாச்சியார், காயத்ரி, ஹாரிஸ் மூசா, மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் சகோதரி மகன் அஸ்கர் சவுதன், சேரன்ராஜ், ஜாஷ் பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவரான இயக்குநர் ஸ்ரீ, இப்படத்தைத் தனது இரண்டாவது திரைப்படமாக இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள முதல் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தொழில்நுட்பக் கலைஞர்களைப் பொறுத்தவரை, தேசிய விருது பெற்ற ‘கேப்டன் மில்லர்’ படத்தின் எடிட்டர் நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ‘ஜிகர்தண்டா’, ‘சூது கவ்வும்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குநர் பில்லா ஜெகன், இப்படத்தின் சண்டைக் காட்சிகளை வித்தியாசமான முறையில் வடிவமைத்துள்ளார். ‘RRR’ திரைப்படத்தில் பணியாற்றிய நடன இயக்குநர் ஹரிகிரன் நடனக் காட்சிகளை அமைத்துள்ளார். பிரன்டன் சுஷாந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
‘போடா போடி’ முதல் ‘காக்கும் கடவுள்’ வரை பல திரைப்படங்களுக்கு இசையமைத்த தரண்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘பேட்ட’, ‘பீஸ்ட்’, ‘ரெமோ’, ‘பட்டாஸ்’, ‘டோரா’, ‘டக்கர்’ உள்ளிட்ட படங்களில் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் கு. கார்த்திக் இப்படத்தின் பாடல்கள் மட்டுமின்றி வசனம் மற்றும் திரைக்கதையையும் எழுதியுள்ளார். 80-களில் தொடங்கி ஜென்-ஸி தலைமுறை வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பாடல்களும் வசனங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவிக்கிறது.
முன்னணி பாடகர்களான ஆதித்யா ஆர்.கே., சாம் விஷால், விவசாயி மகன் ராவணா ராம் ஆகியோர் இப்படத்தின் பாடல்களைப் பாடியுள்ளனர். தற்போது படத்தின் பாடல் உருவாக்கப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. மக்கள் தொடர்புப் பணிகளை கேப்டன் ஆனந்த் கவனித்து வருகிறார்.
நட்பு, காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், எமோஷன் என அனைத்து அம்சங்களும் கலந்த முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. குறிப்பாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் உண்மையான நட்புக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களத்துடன் இப்படம் தயாராகி வருவதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் ஒரு பாடலை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு நண்பனும் தன் வாழ்க்கையில் மறந்துபோன நட்பையும் நண்பர்களையும் நினைவுகூரும் வகையில் இப்படம் அமையும் என்றும், ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடிக்கும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.