ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு – புதுமணத் தம்பதிகளின் காதல், ரொமான்ஸ் சொல்லும் அழகான மெலடி!

9

 

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தகப்பன்’. இப்படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ எனும் இரண்டாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில், மோகன் ராஜன் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை ஹரிசரண், சைந்தவி மற்றும் நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

ஏற்கெனவே வெளியான ‘தங்கபுள்ள’ முதல் பாடல் தந்தை – மகன் இடையிலான அன்பு, பாசம் மற்றும் உணர்வுப்பூர்வமான உறவை வெளிப்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ பாடல் கணவன் – மனைவி இடையிலான காதல், ரொமான்ஸ் மற்றும் அழகான இல்லற வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

மென்மையான இசையும் இனிமையான மெலடியும் இணைந்துள்ள இப்பாடல், புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்கு இடையிலான காதல், நெருக்கம், ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் அன்பு என அவர்களது அழகான வாழ்க்கையை ரசிக்கும்படி காட்சிப்படுத்துகிறது. குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில் எவ்வித விரசமும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலில், கதையின் முக்கியமான திருப்பங்களும் கதாபாத்திரங்களின் வாழ்க்கைப் பயணமும் பாடல் காட்சிகளின் வழியாகவே சொல்லப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

குறிப்பாக, படத்தின் முக்கியத் திருப்புமுனையாகவும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளின் தொகுப்பாகவும் இப்பாடல் இடம்பெறுகிறது. லாரி ஓட்டுநராக இருக்கும் நாயகனுக்கும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நாயகிக்கும் இடையே மலரும் காதல், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கோயிலில் திருமணம் செய்துகொள்ளும் தருணம் என அவர்களின் காதல் பயணம் அழகாக விவரிக்கப்படுகிறது.

தொடர்ந்து, ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள சிறிய கிராமத்து வீட்டில் புதுமணத் தம்பதிகள் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். அவர்களுக்கிடையிலான அன்றாட ரொமான்ஸ், கர்ப்பமடையும் மகிழ்ச்சியான தருணம் என இனிமையாக நகரும் வாழ்க்கையில், நாயகியின் அம்மாவிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் ஏற்படுத்தும் மாற்றங்களும் சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டுள்ளது. ‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும், திரைப்படம் நிறைவடைவதற்கு முன்பே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனமும், ஓடிடி உரிமையை ZEE5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘தகப்பன்’ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘சொக்க வச்சாளே’ பாடலைக் காண: