ஒரு கையில் துப்பாக்கி… மறுகையில் டெடி பியர்! மர்மமான தோற்றத்தில் ராம் போதினேனி – #RaPo23 ப்ரீ-லுக் வெளியீடு!

7

தெலுங்குத் திரையுலகின் எனர்ஜெட்டிக் ஸ்டார் ராம் போதினேனி, நடிகராக மட்டுமின்றி தற்போது இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் எழுதி, இயக்கும் முதல் திரைப்படமான #RaPo23 படத்தின் சுவாரஸ்யமான ப்ரீ-லுக் போஸ்டர் சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. ‘தி ஸ்டோரி ஆஃப் எ லோன் வுல்ஃப்’ (The Story of a LONE WOLF) என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது.

பிரம்மாண்டமான கட்டிட அமைப்பிற்குள் அமைந்துள்ள படிக்கட்டுகளில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி நிற்கிறார் ராம் போதினேனி. கருப்பு நிற உடை, வித்தியாசமான V வடிவ ஹேர் ஸ்டைல், தலையின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ள டாட்டூ என அவரது தோற்றம் தனித்துவமாக அமைந்துள்ளது. ஒரு கையில் துப்பாக்கியும், மறுகையில் டெடி பியரும் வைத்திருக்கும் அவரது தோற்றம் பல்வேறு கேள்விகளையும் மர்மங்களையும் எழுப்புகிறது. சாம்பல் நிறப் பின்னணியும் பிரம்மாண்டமான கட்டிட அமைப்பும் போஸ்டரின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்கின்றன.

மேலும், ‘லோன் வுல்ஃப்’ கதாபாத்திரத்திற்கான அறிமுக விளக்கத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. “தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து, உலகத்தைத் தனியாக எதிர்கொள்ளும் வலிமையும் சுதந்திரமும் கொண்ட மனிதன்” என்பதே அந்த விளக்கம். இதன் மூலம் தனித்துவமான சிந்தனை, சுதந்திரமான அணுகுமுறை மற்றும் மன உறுதி கொண்ட ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருப்பது தெரியவருகிறது.

இதற்கிடையே, ராம் போதினேனியின் திரைப்பயணம் பல்வேறு திரையுலகங்களிலும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் #DHARMAN திரைப்படம் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். ரஜினிகாந்துடன் ராம் போதினேனி இணைந்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஒருபுறம் #DHARMAN மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் அவர், மறுபுறம் #RaPo23 திரைப்படத்தின் மூலம் எழுத்தாளர் மற்றும் இயக்குநராகவும் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், ராப்போ சினிமேட்டிக்ஸ் நிறுவனம் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகிறார். சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு (திரு) ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ஏ.எஸ். பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்புப் பணிகளை மேற்கொள்கிறார். பீட்டர் ஹெய்ன், விக்ரம் மோர் மற்றும் கெவின் ஆகியோர் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர்.

சர்வதேச ஆண்கள் தினத்தில் வெளியான இந்த ப்ரீ-லுக் போஸ்டர், ராம் போதினேனியின் இயக்குநர் அறிமுகத்திற்கு வலுவான முன்னோட்டமாக அமைந்துள்ளது. விரைவில் இப்படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. நடிகராகத் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய ராம் போதினேனி, தற்போது இயக்குநராகவும் களமிறங்கியிருப்பதால் #RaPo23 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.