57-வது IFFI திரைப்பட விழாவின் ‘காலா பிரீமியர்’ பிரிவில் திரையிடத் தேர்வான ஒரே தமிழ்ப் படம் ‘கூடு’!

12

பனோரமா ஸ்டுடியோஸ், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘கூடு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) மதிப்புமிக்க ‘காலா பிரீமியர் ஃபீச்சர் ஃபிலிம்’ பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது. இந்த ஆண்டு இப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ்த் திரைப்படம் ‘கூடு’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான IFFI-ல் இப்படம் இடம்பெறுவது படக்குழுவினருக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் பெருமை சேர்க்கும் அங்கீகாரமாக அமைந்துள்ளது.

உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கூடு’ திரைப்படம், மனிதநேயம், இயற்கை மீதான அக்கறை மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையைக் கொண்டுள்ளது. ஒரு கிராமத்தில் அரிய வகைப் பறவைகள் மின்மாற்றி ஒன்றிற்குள் கூடு கட்டுகின்றன. இதையடுத்து அந்தப் பறவைகளையும் அவற்றின் கூட்டையும் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த கிராம மக்களும் எடுக்கும் அசாதாரணமான முடிவுகளே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளன. ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியும், இயற்கையின் மீதான பரிவும் எத்தகைய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை இப்படம் எடுத்துரைக்கிறது.

தனிநபர் நாயகர்களை மையமாகக் கொண்ட கதைகள் அதிகம் உருவாகும் இன்றைய சூழலில், ஒரு கிராமமே கதையின் நாயகனாக மாறும் வகையில் ‘கூடு’ திரைப்படம் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் கிராமியப் பின்னணியில், அன்பு, நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான கதை சொல்லலுடன் சாதாரண மனிதர்களின் அசாதாரணமான துணிச்சலை இப்படம் கொண்டாடுகிறது.

இயக்குநர் ஜோயல் விஜய் இப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். VJ கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரச்சிதா மகாலட்சுமி, நமோ நாராயணா, ஷா ரா, சார்லஸ் வினோத், அனிதா சம்பத், சசி செல்வராஜ், திராவிட் செல்வம், VJ ஆஷிக், தனலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோஜ் கிருஷ்ணா இசையமைத்துள்ளார். டேவிட் வில்லியம்ஸ் கதையை எழுதியுள்ளார்.

இப்படம் IFFI விழாவில் தேர்வானது குறித்து தயாரிப்பாளர் குமார் மங்கட் பதக் பேசுகையில், “வித்தியாசமான கதையைக் கொண்ட ‘கூடு’ திரைப்படத்திற்கு IFFI சரியான தளம் என்று நம்புகிறேன். பல்வேறு வகையான திரைப்படங்களை ரசிக்கும் பார்வையாளர்களை இந்த விழா ஒன்றிணைக்கிறது. இங்கு இப்படம் தனக்கான பார்வையாளர்களைக் கண்டடையும் என்றும், நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் நம்புகிறேன். இயக்குநர் ஜோயல் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி” என்றார்.

தயாரிப்பாளர் அபிஷேக் பதக் கூறுகையில், “ஒரு ஒட்டுமொத்தச் சமூகத்தின் கதையை எளிமையாகச் சொல்வதுதான் ‘கூடு’ படத்தின் சிறப்பு. இதுபோன்ற கதைகள் தங்களது வழக்கமான பார்வையாளர் வட்டத்தைத் தாண்டி பலரையும் சென்றடைய IFFI சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இந்தப் படம் விழாவில் பார்வையாளர்களின் மனங்களுடன் ஒன்றிணைந்து, திரையரங்குகளில் வெளியாகும்போதும் அதிகமான ரசிகர்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்” என்றார்.

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் எம். கணேஷ் பேசுகையில், “இந்தத் தேர்வு ‘கூடு’ திரைப்படத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம். அன்பு, ஒற்றுமை மற்றும் ஒரு சமூகத்தை வரையறுக்கும் தேர்வுகளை மையமாகக் கொண்ட படம் இது. IFFI பார்வையாளர்களுடன் இந்தச் சிறப்பான பயணத்தைப் பகிர்ந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்” என்றார்.

கல்ட் டிஜிட்டல் தயாரிப்பாளர் ஆதித்யா ஜோஷி கூறுகையில், “மொழிகளைக் கடந்து பார்வையாளர்களின் மனதைத் தொடும் ஆற்றல் ‘கூடு’ படத்திற்கு இருப்பதாக நாங்கள் எப்போதும் நம்பினோம். IFFI-ன் காலா பிரீமியர் பிரிவில் தேர்வான ஒரே தமிழ்ப் படம் இதுவென்பது இந்த அங்கீகாரத்தை மேலும் சிறப்பாக்குகிறது. இத்தகைய புகழ்பெற்ற தளத்தில் எங்கள் கதையைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.

இயக்குநர் ஜோயல் விஜய் கூறுகையில், “முதல் திரைக்கதை வடிவம் உருவானது முதல் இறுதிக் காட்சி படமாக்கப்பட்டது வரையிலான ‘கூடு’ திரைப்படத்தின் பயணம் நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் உறுதியின் வெளிப்பாடாக அமைந்தது. ஒருகட்டத்தில் திரையில் கொண்டுவருவது சாத்தியமற்றதாகத் தோன்றிய இந்தக் கதை, இன்று இந்தியாவின் முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான IFFI-ல் இடம்பிடித்துள்ளது. இந்த அங்கீகாரம் ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் மிகவும் சிறப்பான தருணம்” என்றார்.

பனோரமா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை, ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. குமார் மங்கட் பதக், அபிஷேக் பதக், எம். கணேஷ், சுனில் ஜெயின், ஆதித்யா ஜோஷி மற்றும் லிஷா பி. சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். ராஜேஷ் மேனன் இணைத் தயாரிப்பாளராகவும், அபிநவ் மெஹ்ரோத்ரா படைப்புத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘கூடு’ திரைப்படத்தின் காலா பிரீமியர் திரையிடல் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.