“கீர்த்தியை மனதில் வைத்தே இந்தக் கதையை எழுதினேன்!” – மிஷ்கினுடன் இணைந்த அனுபவத்தைப் பகிர்ந்த இயக்குநர் பிரவீன்; இன்று வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’!

7

Drumsticks Productions மற்றும் Zee Studios நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஒரு வழக்கை மையமாகக் கொண்டு நீதிமன்றப் பின்னணியில் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் இன்று (நவம்பர் 20) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

Drumsticks Productions நிர்வாக இயக்குநர் விவேக் பேசுகையில், இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர் பிரவீன், ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், இசையமைப்பாளர் சாம் C.S., படத்தொகுப்பாளர் G.K. பிரசன்னா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். படத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைகளைக் கைப்பற்றிய Zee5, Zee Tamil நிறுவனங்களுக்கும், இசை உரிமையைப் பெற்ற T-Series நிறுவனத்திற்கும், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படத்தை வெளியிடும் ரமண ராஜா அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசுகையில், “கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இருவருடைய நடிப்பையும் படமாக்கியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். குறிப்பாக, இருவரும் இணைந்து நடித்த நீதிமன்றக் காட்சிகள் பார்ப்பதற்கும் படமாக்குவதற்கும் அழகாக இருந்தன. நடிகர்களின் நடிப்புக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காகத் தரையில் விளக்குகள் வைக்காமல், அனைத்து விளக்குகளையும் மேலே பொருத்திப் படமாக்கினோம். அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய்க்கு இப்படம் சிறந்த தொடக்கமாக அமையும் என்று நம்புகிறேன். கதைக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் தயாரிப்பாளர்கள் வழங்கினார்கள். படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் பேசுகையில், “ஒரு திரைப்படத்தைத் தொடங்கும்போது நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்வதுதான் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சவால். ஆனால், இந்தப் படத்தில் மிஷ்கின் சார், கீர்த்தி சுரேஷ் போன்ற திறமையான கலைஞர்கள் இணைந்தபோதே எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. படக்குழுவினர் அனைவரும் இணைந்த விதம் படம் சிறப்பாக உருவாகும் என்ற நிம்மதியைக் கொடுத்தது. இதற்கு முன்பு எங்களுடைய திரைப்படங்களுக்கு ஊடக நண்பர்கள் வழங்கிய ஆதரவைப் போலவே, ‘சத்தியவான் சாவித்திரி’ படத்திற்கும் ஆதரவு அளித்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

இசையமைப்பாளர் சாம் C.S. பேசுகையில், “நீதிமன்றப் பின்னணியிலான காட்சிகளுக்கு இசையமைப்பது சவாலானது. வசனங்களின் தீவிரத்தையும் கதையின் அழுத்தத்தையும் இசையின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். அந்த வகையில் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் திரைக்கதை இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது. நீதிமன்றக் காட்சிகள் மட்டுமின்றி குடும்ப உணர்வுகள், திரில்லர், சஸ்பென்ஸ், கொலை மர்மம் எனப் பல அம்சங்கள் இதில் உள்ளன. சமீபத்தில் நான் பணியாற்றிய படங்களில் மிகவும் பிடித்த திரைக்கதைகளில் இதுவும் ஒன்று. மிஷ்கின் சார் வித்தியாசமான வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷும் தனது கதாபாத்திரத்தின் பல்வேறு உணர்வுகளையும், கிரே ஷேடுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் ரீலை இசையில்லாமல் பார்த்தபோதே கதை என்னைக் கவர்ந்துவிட்டது. ரசிகர்கள் திரையரங்குகளில் இப்படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

நடிகை பிரிகிடா பேசுகையில், “இந்தப் படத்தில் நாடகக் கலைஞர் சாவித்திரி என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனது கதாபாத்திரம் குறைவான நேரமே வந்தாலும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி இருவரையும் எனது ரோல் மாடல்களாகப் பார்க்கிறேன். மிஷ்கின் சாரின் படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. கதாநாயகியாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என்றார்.

நடிகை ஷில்பா மஞ்சுநாத் பேசுகையில், “இயக்குநர் பிரவீன் S. விஜய் மிகச்சிறந்த கதைசொல்லி. அவர் கதையை விவரித்த விதமே எனக்குப் பிடித்திருந்தது. கீர்த்தி சுரேஷ் மிகச்சிறந்த நடிகை. படத்தின் டிரெய்லரில் வசனங்கள் இல்லாத காட்சிகளில்கூட தனது முகபாவனைகளால் பல உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். மிஷ்கின் சாரின் நகைச்சுவை உணர்வு குறித்தும், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் கேள்விப்பட்டிருக்கிறேன். எதிர்காலத்தில் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. எனது கதாபாத்திரம் குறித்து இப்போது அதிகம் சொல்ல விரும்பவில்லை. நவம்பர் 20ஆம் தேதி வெளியாகும் படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளியுங்கள்” என்றார்.

நடிகர் சாருகேஷ் பேசுகையில், “ஒரு முழுமையான நடிகராக உங்கள் முன்னால் நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனது முதல் பெரிய மேடை என்பதால் கொஞ்சம் பதற்றமாகவும் இருக்கிறது. கீர்த்தி சுரேஷுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது கனவு நனவான அனுபவம். ஆரம்பத்தில் அவருடன் நடிக்கப் பதற்றமாக இருந்தாலும், என்னை இயல்பாக உணர வைத்தார். மிஷ்கின் சாரின் நடிப்பையும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் வெளிப்படுத்தும் ஆற்றலையும் நேரில் பார்த்து வியந்தேன். எனக்குக் காட்சி இல்லாத நாட்களில்கூட அவரும் கீர்த்தியும் நடிக்கும் காட்சிகளைப் பார்ப்பதற்காகப் படப்பிடிப்புக்குச் செல்வேன். இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.

அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் பேசுகையில், “ஒரு புதிய இயக்குநரின் முதல் படத்தை உருவாக்கும்போது தயாரிப்புத் தரப்பிலிருந்து கிடைக்கும் ஆதரவு மிகவும் முக்கியம். தயாரிப்பாளர்கள் சக்தி சார், விஜய் சார், விவேக் சார் மூவரும் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் ஒவ்வொரு காட்சியிலும் தனித்துவமான கேமரா அசைவுகளைக் கொண்டு வந்தார். சாம் C.S. எனது தேவைகளைப் புரிந்துகொண்டு பணியாற்றினார். படத்தொகுப்பாளர் G.K. பிரசன்னா தனது பணியின் மூலம் திரைக்கதைக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார். மிஷ்கின் சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது 14, 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எனது ஆசை. இந்தப் படத்தின் மூலம் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி; அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். கீர்த்தி சுரேஷை மனதில் வைத்தே இந்தக் கதையை எழுதினேன். அவர் மற்றும் மிஷ்கின் இருவரும் நான் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக நடித்து, கதாபாத்திரங்களுக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார்கள். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் மிஷ்கின் பேசுகையில், “இயக்குநர் பிரவீன் S. விஜய் குழந்தை போன்ற மனம் கொண்ட அற்புதமான மனிதர். இந்தப் படத்தில் என்னையும் கீர்த்தி சுரேஷையும் குடும்பத்தினர் போல அன்புடன் கவனித்துக்கொண்டார். ஒரு உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக வருவதில் இருக்கும் சிரமம் எனக்குத் தெரியும். இந்தப் படத்தில் அவர் எனக்கு முழுமையான நடிப்புச் சுதந்திரம் கொடுத்தார். நானும் கீர்த்தியும் பல காட்சிகளை இயல்பாக இம்ப்ரொவைஸ் செய்து நடித்தோம். ஒரு நடிகரின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இயக்குநர் வழங்க வேண்டும்; அதை பிரவீன் சிறப்பாகச் செய்தார்.

கீர்த்தி சுரேஷை என்னுடைய மகளைப் போலப் பார்க்கிறேன். அவரிடம் அபாரமான நடிப்புத் திறமை இருக்கிறது. இந்திய சினிமாவில் எனக்குப் பிடித்த நடிகைகளில் சாவித்திரி முக்கியமானவர். அந்தப் பெயரில் உருவான படத்தில் கீர்த்தி நடித்திருப்பது மகிழ்ச்சி. அவர் இன்னும் 20 முதல் 25 ஆண்டுகள் தொடர்ந்து நடிக்க வேண்டும். சாம் C.S. இந்தப் படத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். சினிமா என்பது வெறும் தொழில் கிடையாது; மனிதர்களை நேசிக்கவும் அழகான உணர்வுகளை அனுபவிக்கவும் கற்றுக்கொடுக்கும் கலை. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “உடல்நலக் குறைவு காரணமாகப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். தயாரிப்பாளர்கள் சக்தி சார், விஜய் சார், விவேக் சார் மற்றும் Drumsticks Productions நிறுவனத்தினருக்கு நன்றி. இயக்குநர் பிரவீனை ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் காலத்திலிருந்தே தெரியும். பல ஆண்டுகளாக அவருக்கு நெருக்கமான கதையாக இருந்த ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தை இயக்கியிருப்பது மகிழ்ச்சி. அவர் எனக்கு ஒரு சகோதரரைப் போல மாறிவிட்டார்.

மிஷ்கின் சாருடன் முதலில் நடிக்கும்போது பயமாக இருந்தது. ஆனால் இரண்டு நாட்களிலேயே அவருடன் நெருக்கமாகிவிட்டேன். அவர் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். சிறந்த நடிகர், இயக்குநர் என்பதைத் தாண்டி மிகச் சிறந்த மனிதர். அவருடன் இணைந்து திரையில் நடித்தது பெருமையாக இருக்கிறது. பிரிகிடாவின் சாவித்திரி நாடகக் காட்சிகள் மிகவும் அழகாக இருந்தன. சாருகேஷ், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், இசையமைப்பாளர் சாம் C.S., படத்தொகுப்பாளர் G.K. பிரசன்னா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, ‘Rise of Savithri’ பாடல் எனக்குப் பிடித்தமானது. நான் படத்தைப் பார்த்துவிட்டேன்; எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீதிமன்றப் பின்னணியுடன் குற்றப் புலனாய்வு அம்சங்களும் நிறைந்த திரில்லர் படமாக இது இருக்கும். ரசிகர்களும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்திற்கு எதிராக வாதாடும் வழக்கறிஞராக மிஷ்கின் நடித்துள்ளார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், மதுசூதனன், R. சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, A. வெங்கடேஷ், ராஜா ராணி பாண்டியன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் C.S. இசையமைத்துள்ளார். G.K. பிரசன்னா படத்தொகுப்புப் பணிகளையும், பிரேம் கருந்தமலை மற்றும் AM ஆனந்த்ராஜ் கலை இயக்கப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். மோகன்ராஜன், கார்த்திக் நேத்தா, உமா தேவி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

Drumsticks Productions மற்றும் Zee Studios இணைந்து தயாரித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் இன்று நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படம், நீதிமன்ற விசாரணை, குற்ற மர்மம் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகியுள்ளது.

Event Photo Gallery :