IFFI 2026 இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தேர்வான ‘Scroll’ – ICFT-UNESCO Gandhi Medal விருதிற்கும் பரிந்துரை!
K16 Studios தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Scroll’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI 2026), இந்தியன் பனோரமா (Indian Panorama) பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதிப்புமிக்க ICFT-UNESCO Gandhi Medal விருதிற்கும் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஏழு சர்வதேசத் திரைப்படங்களுடன் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் ‘Scroll’ பெற்றுள்ளது.
‘Password’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கண்ணன், தனது இரண்டாவது திரைப்படமாக ‘Scroll’ படத்தை உருவாக்கியுள்ளார். வித்தியாசமான திரைக்கதை முயற்சியாக உருவாகியுள்ள இப்படம், ‘Screen Movie’ வகையைச் சேர்ந்தது. அதாவது, படத்தின் முழுக் கதையும் நாயகனின் செல்போன் திரை வழியாகவே சொல்லப்படுகிறது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு ஒருவர் அடிமையாவதற்கான காரணங்களையும், அதன் பின்னணியில் இருக்கும் உளவியல் அம்சங்களையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தின் பிடியில் மனித இனம் சிக்கியிருக்கிறதா? அல்லது மனிதனின் எதிர்மறையான எண்ணங்களுக்குத் தொழில்நுட்பம் ஒரு கருவியாக மாறியிருக்கிறதா? என்ற இரண்டு முக்கியமான கேள்விகளை முன்வைத்து, விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.
அரவிந்த் சுந்தர் மற்றும் காவ்யா அனில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘Haamam’ மேகா ராஜன், ‘கொட்டுக்காளி’ முருகன் கோவிந்தசாமி, ‘Vikkals’ சிபி, பொற்கொடி மற்றும் சுரேந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜோகன் மற்றும் தினகர் (JD) இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் இயக்குநர் கண்ணனே திரைக்கதை, ஒளிப்பதிவு மற்றும் VFX பணிகளையும் கவனித்துள்ளார்.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரைக் கொண்டு, குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ‘Scroll’, அதன் தனித்துவமான கதைக்களம் மற்றும் புதுமையான திரைக்கதை முயற்சியால் சர்வதேசத் திரைப்பட விழாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரிய பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களுக்கு மத்தியில், அதன் உள்ளடக்கத்திற்காக இப்படம் பெற்றுள்ள இந்த அங்கீகாரம் தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது.
நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘Scroll’ திரைப்படம் தனது உலகளாவிய முதல் திரையிடலை (World Premiere) காணவுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

