பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘மூன்வாக்’ டிரெய்லர் வெளியீடு… டிசம்பர் 24 முதல் திரையரங்குகளில் சிரிப்பு சரவெடி!
Behindwoods Productions தயாரிப்பில், பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் டிசம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர், தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் படத்தின் டிரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நகைச்சுவை, நடனம், இசை என கலகலப்பான அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லரின் இறுதியில், ஏ.ஆர்.ரஹ்மான் பேசும், “நாலு பேர் சந்தோஷமா சிரிக்கிறாங்கன்னா, எதுவும் தப்பில்லை” என்ற வசனம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதன் அவசியத்தை வெளிப்படுத்தும் இந்த வசனம், படத்தின் மையக் கருத்தையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
குடும்பத்துடன் இணைந்து சிரித்து மகிழும் வகையில் #FamilyLaughter, #HolidayLaughter என்ற கருப்பொருளில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாகிறது. Behindwoods நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இப்படத்தை இயக்கியுள்ளார். நகைச்சுவை, இசை, நடனம், காதல் என அனைத்து அம்சங்களும் நிறைந்த குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் யோகி பாபு 16 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. அவருடன் சதீஷ் குமார், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், தீபா சங்கர், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், ராம்குமார் நடராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதுடன், இதன் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார். பிரபுதேவாவின் நடனமும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் இணைந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தை மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன், திவ்யா மனோஜ், பிரவீன் ஏலக் ஆகியோர் Behindwoods Productions சார்பில் தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இப்படத்தை, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.
வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘மூன்வாக்’, இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரசிகர்களைச் சிரிக்கவும், பாடவும், ஆடவும் வைக்கும் குடும்பப் பொழுதுபோக்குப் படமாக இருக்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.