15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ஷாருக்கான் – கரீனா கபூர்… ‘கிங்’ படத்தின் ‘டாடி கூல்’ பாடல் வெளியீடு!

31

ஷாருக்கான் மற்றும் கரீனா கபூர் கான் இணைந்து நடனமாடும் ‘டாடி கூல் (கிங் வெர்ஷன்)’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய பாடலாக இது வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் மூலம் இந்தி சினிமாவின் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஷாருக்கான் – கரீனா கபூர் ஜோடி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘து மில் ஜாயே’ பாடலில் தனது காதல் நாயகன் தோற்றத்தாலும், அதிரடி ஆக்‌ஷன் அவதாரத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த ஷாருக்கானின் ‘கிங்’ திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டாக ‘டாடி கூல் (கிங் வெர்ஷன்)’ வெளியாகியுள்ளது. உற்சாகமான இசை, கவர்ச்சியான ரிதம், ரெட்ரோ நடன அசைவுகள் என உலகப் புகழ்பெற்ற ‘டாடி கூல்’ பாடலுக்கு புதிய பாலிவுட் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் தனது வழக்கமான ஸ்டைல் மற்றும் வசீகரத்துடன் நடனமாட, கரீனா கபூர் கான் தனது அழகான திரைத் தோற்றத்தால் பாடலுக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளார். இருவருக்கும் இடையிலான திரை கெமிஸ்ட்ரி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

போனி எம். பாடிய உலகப் புகழ்பெற்ற ‘டாடி கூல்’ பாடலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதிய வெர்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபிராங்க் ஃபேரியன் மற்றும் ஜார்ஜ் ரெயாம் எழுதிய பாடலுக்கு புதிய இசை வடிவம் கொடுத்துள்ளனர் சச்சின் – ஜிகர். தேசிய விருது பெற்ற பாடகர்களான அரிஜித் சிங் மற்றும் ஷில்பா ராவ் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர். தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் வைபவி மெர்ச்சன்ட் நடன அமைப்பை மேற்கொண்டுள்ளார். குமார் இந்திப் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

மெட்டாவின் முக்கிய நிகழ்வான ‘ஹவுஸ் ஆஃப் இன்ஸ்டாகிராம் 2026’ நிகழ்ச்சியில் இப்பாடல் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்தியாவின் 700-க்கும் மேற்பட்ட முன்னணி உள்ளடக்கப் படைப்பாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பாடல் வெளியீடு நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் வெளியீட்டை முன்னிட்டு ‘கிங்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படத்தின் ஒவ்வொரு புதிய அறிவிப்பும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டி வரும் நிலையில், ‘டாடி கூல் (கிங் வெர்ஷன்)’ பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இப்பாடலை Zee Music Company மற்றும் T-Series நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களில் கண்டு ரசிக்கலாம்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘கிங்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.