காசினோ திரையரங்கில் கைலாயத்தையே உருவாக்கிய சிவாஜி ரசிகர்கள்… ‘திருவிளையாடல்’ மறு வெளியீட்டைக் கொண்டாடும் அசத்தல் ஏற்பாடு!

11

அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான காலத்தால் அழியாத திரைப்படம் ‘திருவிளையாடல்’. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம், நேற்று முதல் தமிழகம் முழுவதும் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையிடப்பட்டு வருகிறது.

சென்னையில் சத்யம், தேவி, பேரடைஸ், காசினோ உள்ளிட்ட பல்வேறு திரையரங்குகளிலும், தமிழகம் முழுவதும் மொத்தம் 150 திரையரங்குகளிலும் ‘திருவிளையாடல்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. பழம்பெரும் திரைப்படங்களை மீண்டும் பெரிய திரையில் காணும் வாய்ப்பை ரசிகர்களுக்கு வழங்கும் இந்த மறு வெளியீடு, சிவாஜி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் வெளியீட்டைக் கொண்டாடும் வகையில், சென்னை காசினோ திரையரங்கில் சிவாஜி ரசிகர்கள் வித்தியாசமான ஏற்பாட்டைச் செய்துள்ளனர். திரையரங்க வளாகத்திலேயே கைலாயத்தைப் போன்ற பிரம்மாண்ட அரங்கத்தை வடிவமைத்துள்ளனர். அதன் நடுவே, சிவபெருமானின் தோற்றத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சிவாஜி கணேசனின் உருவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும், தினமும் மாலை நேரங்களில் சிவபெருமானின் தோற்றத்தில் காட்சியளிக்கும் சிவாஜி உருவத்திற்குத் தீபாராதனை நடத்தி, பக்தர்களுக்கும் ரசிகர்களுக்கும் பிரசாதம் வழங்கி வருகின்றனர். ஒரு திரைப்படத்தின் மறு வெளியீட்டை ஆன்மிகக் கொண்டாட்டம் போல மாற்றியுள்ள சிவாஜி ரசிகர்களின் இந்த முயற்சி, திரையரங்கிற்கு வரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

60 ஆண்டுகளைக் கடந்தும் சிவாஜி கணேசனின் நடிப்பும், ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் அன்பும் குறையவில்லை என்பதற்கு இந்தக் கொண்டாட்டமே சான்றாக அமைந்துள்ளது.