தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பேசில் ஜோசப் மற்றும் ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்துள்ள நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ராவடி’ (Raawadi). அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ள இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘குஜிலி மஸ்து’ பாடலின் மியூசிக் வீடியோவைப் படக்குழுவினர் சென்னை கத்திப்பாரா அர்பன் ஸ்கொயரில் வெளியிட்டனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு எல்.கே. விஷ்ணுகுமார் இணை தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். பேசில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார், ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ., சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இளைஞர்களைக் கவரும் வகையிலான கமர்ஷியல் யூத்ஃபுல் என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.
வரும் டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ராவடி’ படத்தின் முதல் பாடலான ‘அட்ரா பரமா’ வெளியாகி, மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் இரண்டாவது பாடலான ‘குஜிலி மஸ்து’ தற்போது வெளியாகியுள்ளது.
செம்வி மற்றும் ராம் சே இணைந்து எழுதியுள்ள இப்பாடலை அந்தோணி தாசன் மற்றும் ஜென் மார்ட்டின் இணைந்து பாடியுள்ளனர். துள்ளலான இசை, உற்சாகமான பாடல் வரிகள் என இளைஞர்களை நடனமாடத் தூண்டும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.
‘வணக்கம்! எவ்ரிபடி… குஜிலி மஸ்து… எல்லாரும் மஜா பண்ண ரெடியா இருக்கீங்களா?’ மற்றும் ‘அராஜகம் பத்தல பத்தல… பப்பரப்பப்பா குஜிலி மஸ்து…’ போன்ற ஈர்க்கக்கூடிய வரிகள் பாடலுக்கு மேலும் உற்சாகம் சேர்க்கின்றன. திரையரங்கில் தங்களுக்குப் பிடித்த நடிகரின் படத்தைப் பார்த்துக் கொண்டாடும் ரசிகர்கள், நண்பர்களுக்கு இடையேயான நட்பு, கல்லூரி விடுதியில் சீனியர் – ஜூனியர் உறவு என இளமைத் துடிப்பான பல காட்சிகள் பாடல் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, பேசில் ஜோசப்பின் ஸ்டைலான தோற்றம், நடனக் கலைஞர்களின் உற்சாகமான ஆட்டம், ரசிகர்களைக் கவரும் வகையிலான ஹூக் ஸ்டெப்ஸ் எனப் பாடல் முழுவதும் கொண்டாட்டமான சூழல் நிறைந்துள்ளது. இதனால் வெளியானது முதலே ‘குஜிலி மஸ்து’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதுடன், சமூக வலைதளங்களிலும் நடனக் கொண்டாட்டங்களுடன் வைரலாகி வருகிறது.
முதல் பாடலைத் தொடர்ந்து இரண்டாவது பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
