ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ்!

6

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் பரபரப்பான அரசியல் கதையான ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையை பெற்றுள்ளது.

இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆகஸ்ட் 28 அன்று ‘கராத்தே பாபு’ திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, “அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது. உணர்வுப்பூர்வமான அரசியல் திரில்லராக ‘கராத்தே பாபு’ உருவாகி உள்ளது,” என்று தெரிவித்தார்.

‘கராத்தே பாபு’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை எழில் அரசு கே கவனித்துள்ள நிலையில், கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக சண்முகராஜா பணியாற்றியுள்ளார்.

படத்தில் வி.டி.வி. கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜா ராணி பாண்டியன், இலன், சாம் ஆண்டர்சன், ஸ்ரீ தன்யா, சந்தீப் ரவி ராஜ், ஆனந்தி, சிந்து பிரியா, அஜித் கோஷ், கல்கி ராஜா, நைஃப் நரேன், வெற்றி, அரவிந்த், தர்மராஜ், நந்தினி செந்தமிழன், ஜீவா சுப்ரமணியம் மற்றும் மணிமேகலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரத்ன குமார் மற்றும் பாக்கியம் சங்கர் இணை எழுத்தாளர்களாக பணியாற்றியுள்ள நிலையில், திலிப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். அருணாச்சலம் சிவலிங்கம் ஒலி வடிவமைப்பையும், சதீஷ் கிருஷ்ணன் நடன அமைப்பையும், காயத்ரி பாலசுப்ரமணியன் ஆடை வடிவமைப்பையும் கவனித்துள்ளனர்.

கார்த்திக் ஆனந்த்கிருஷ்ணன் தயாரிப்பு நிர்வாகியாகவும், கே.எஸ். செந்தில் குமார் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், கிரண் குமார் எஸ் விநியோகத் தலைவராகவும், எஸ்.ஏ. பாஸ்கரன் கோ-டைரக்டராகவும் பணியாற்றியுள்ளனர்.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கணேஷ் கே. பாபு மேற்கொண்டுள்ளார்.