நிவின் பாலி 50-வது படத்திற்கு ‘விஜயம்’… 11 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரனுடன் மீண்டும் கூட்டணி!
திரையுலக ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ‘நேரம்’ மற்றும் ‘பிரேமம்’ ஆகிய பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் நிவின் பாலியும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘விஜயம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நிவின் பாலியின் திரையுலகப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் 50-வது திரைப்படமாக ‘விஜயம்’ உருவாகி வருகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் அறிமுக வீடியோ, எர்ணாகுளத்தில் உள்ள பத்மா திரையரங்கில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் வெளியிடப்பட்டது.
ரேசிங் விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு அல்போன்ஸ் புத்திரன் கதை எழுதி, இயக்குவதோடு படத்தொகுப்பையும் கவனிக்கிறார். தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியில் மீண்டும் ரசிகர்களை கவர தயாராகியுள்ளார்.
பாலி ஜூனியர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சினிஹோலிக்ஸ் பேனரின் கீழ் டன்சன் டோனி மற்றும் சுனில் ராமடி இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். வடிவமைப்பு மற்றும் நிர்வாகத் தயாரிப்பு பொறுப்புகளை குட்டு சிவானந்தன் மேற்கொள்கிறார்.
‘துரந்தர்’, ‘துரந்தர் 2’ மற்றும் ஆர்யன் கான் இயக்கிய ‘பார்ட்ஸ் ஆஃப் பாலிவுட்’ உள்ளிட்ட படைப்புகளுக்கு இசையமைத்த கேரளாவைச் சேர்ந்த ஸ்டீவ் கோட்டூர், இப்படத்திற்கு பின்னணி இசையமைக்கிறார்.
வெளியாகியுள்ள தலைப்பு அறிவிப்பு வீடியோ, இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனை நகைச்சுவையாக கிண்டல் செய்யும் காட்சியுடன் தொடங்கி, பின்னர் அல்போன்ஸ் புத்திரன் – நிவின் பாலி கூட்டணியின் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாக நினைவூட்டுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘நேரம்’, ‘பிரேமம்’ போன்ற காலத்தால் அழியாத வெற்றிப் படங்களை வழங்கிய கூட்டணி மீண்டும் இணைவதுடன், இது நிவின் பாலியின் 50-வது திரைப்படமாக உருவாகி வருவதால் ‘விஜயம்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.