என்.டி.ஆர் – திரிவிக்ரம் மீண்டும் இணைகிறார்கள்… புராணப் பின்னணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்!
பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் மாஸ் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அரவிந்த சமேத வீரராகவா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இருவரும் மீண்டும் கைகோர்ப்பது இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த புதிய படத்தைப் பற்றிய அறிவிப்பை நடிகர் என்.டி.ஆர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் திரிசூலமும் வேலும் ஒன்றிணைந்திருக்கும் வடிவமைப்புடன், டி.என்.ஏ. குறியீட்டை நினைவூட்டும் காட்சியமைப்பு இடம்பெற்றுள்ளது. அதனுடன் இடம்பெற்றுள்ள “One Spear, One Purpose… One Divine Reckoning” (ஒரே வேல்… ஒரே நோக்கம்… ஒரே தெய்வீக தீர்ப்பு) என்ற டேக்லைன் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், வலுவான கதைக்களம், ஆழமான உணர்வுகள், மிரட்டலான அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான உலகக் கட்டமைப்புடன் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார். அவரது இசை இந்த பிரம்மாண்ட படைப்பிற்கு மேலும் பலம் சேர்க்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) தயாரிக்க, என்.டி.ஆர் ஆர்ட்ஸ் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து தயாரிக்கிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்–இயக்குநர் கூட்டணியும், இரண்டு முக்கிய தயாரிப்பு நிறுவனங்களும் இணைவதால், இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றாக இந்த திரைப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு அட்டவணை மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
