‘ஜெய்பீம்’ கூட்டணி மீண்டும் இணைகிறது… ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் ‘S-48’ பிரம்மாண்ட அறிவிப்பு!

40

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான ‘S-48’அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதால், இந்திய சினிமா ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தை, ‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தயாரித்த இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார். தரமான கதைகளையும், பிரம்மாண்டமான திரை அனுபவங்களையும் வழங்கும் ஹொம்பாலே பிலிம்ஸ், முதல் முறையாக சூர்யா மற்றும் த.செ. ஞானவேல் கூட்டணியுடன் இணைவது திரைப்பட உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

படம் குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறுகையில், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ரசிகர்களின் அன்பைப் பெற்று, வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நடிகர் சூர்யாவுடன் இணைவது பெருமைக்குரிய விஷயம் என்றார். அதேபோல், ‘ஜெய்பீம்’ மூலம் உலகளாவிய கவனத்தை ஈர்த்த இயக்குநர் த.செ. ஞானவேலின் கதை சொல்லும் திறனும், சமூகப் பொறுப்புள்ள படைப்புகளும் தனித்துவமானவை என்றும், மொழி மற்றும் கலாச்சார எல்லைகளைத் தாண்டி பேசப்படும் திரைப்படங்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தப் புதிய படைப்பை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஹொம்பாலே பிலிம்ஸ் எப்போதும் சிறந்த கதைகள், திறமையான கலைஞர்கள் மற்றும் உயர்தர தொழில்நுட்பத்துடன் திரைப்படங்களை உருவாக்கி, உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும், ‘S-48’ திரைப்படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரை அனுபவமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இத்திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கதாநாயகியாக கயாது லோகர் நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, குமரவேல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழுவில் எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவாளராகவும், கே. கதிர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராகவும், பா. கிருத்திகா திரைக்கதைப் பங்களிப்பாளராகவும் இணைந்துள்ளனர். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘S-48’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 22 முதல் தொடங்கவுள்ளதாகவும், இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், சூர்யா – த.செ. ஞானவேல் கூட்டணியின் மற்றொரு முக்கியமான படைப்பாக அமையும் என்றும் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.