மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மொத ராத்திரி’ படப்பிடிப்பு நிறைவு… போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பு!

7

பான் இந்திய அளவில் தரமான மற்றும் வெற்றிகரமான திரைப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் கூறுகையில், “ஒரு திரைப்படத்தை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்வது என்பது ஒட்டுமொத்த படக்குழுவின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்தின் வெளிப்பாடாகும். இயக்குநராக ராஜா கருப்பசாமிக்கு இது முதல் திரைப்படமாக இருந்தாலும், அனுபவம் வாய்ந்த இயக்குநருக்குரிய முதிர்ச்சியுடனும் தெளிவுடனும் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் நிறைவு செய்துள்ளார். அவரது திரைக்கதை மீதான அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் பாராட்டுக்குரியது. இப்படத்திற்காக உழைத்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றனர்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி பேசுகையில், “‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது கதையின் மீது நம்பிக்கை வைத்து, முழுமையான படைப்புச் சுதந்திரத்தையும் தொடர்ந்து ஊக்கத்தையும் வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அயராது உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒத்துழைப்பே இந்தப் பயணத்தை சிறப்பாக நிறைவு செய்ய உதவியது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இந்தப் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில், அசோக் அர்ஜுனன் படத்தொகுப்பையும், பரத் சங்கர் இசையமைப்பையும் கவனித்துள்ளார். பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பாளராகவும், ஏ. பாலுமகேந்திரா கலை இயக்குநராகவும், வியாகி விளம்பர வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

பின்னணிப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.