மைத்ரி மூவி மேக்கர்ஸின் நான்காவது தமிழ் திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்… மாஸ் அவதாரத்தில் துருவ் விக்ரம்!
இந்தியா முழுவதும் தரமான மற்றும் பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தனது தயாரிப்பு பயணத்தை வெற்றிகரமாக விரிவுபடுத்தி வருகிறது. அந்த வரிசையில், தனது நான்காவது தமிழ் திரைப்படத்தை இன்று பாரம்பரிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
சென்னையில் அமைந்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற #MythriTamil04 / #DV4திரைப்படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் சசி, ‘ஹாய் நானா’ சௌர்யுவ், ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்டனி பாக்யராஜ் மற்றும் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், திரைப்படத்தின் முகூர்த்த காட்சிக்கான கிளாப்பை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கும் இந்தப் படத்தில், இளம் நட்சத்திரம் துருவ் விக்ரம்கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் பிருத்வி பாண்டியராஜன் மற்றும் சாய் தீனா முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். ஷபி மற்றும் கரண் அரவிந்த் குமார் இணைந்து கதையை எழுதியுள்ள இந்த திரைப்படத்திற்கு விக்கி ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயசூர்யா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற சண்டைப் பயிற்சி இயக்குநர் விக்ரம் மோர் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.
முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகும் இந்த திரைப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ரவிசங்கர் யலமஞ்சிலி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படமாக உருவாகும் #DV4, அவரை இதுவரை இல்லாத வகையில் முழுமையான மாஸ் அவதாரத்தில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வந்த துருவ் விக்ரம், இந்த முறை பரந்த ரசிகர் வட்டத்தை கவரும் வகையில் விறுவிறுப்பான கமர்ஷியல் கதைக்களத்தில் களமிறங்குகிறார்.
மேலும், அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தில் துருவ் விக்ரம் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


