300-வது பட மைல்கல்லில் யோகி பாபு: “எண்ணிக்கையை விட பயணம்தான் முக்கியம்”

35

நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள 300-வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வருகிற ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி நடைபெற்ற டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது.

ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் யோகி பாபுவுடன் அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, எம். சௌந்தர்யா சரவணன், ரஞ்சன் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பை கவனித்துள்ள நிலையில், பாடல்களை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். வசனங்களை எம்.ஆர். அருண் சந்தர் எழுதியுள்ளார். தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி எஸ். மற்றும் தங்கப்பாண்டி. டி. தயாரித்துள்ள இப்படத்திற்கு எல். சுந்தரபாண்டி இணைத் தயாரிப்பாளராக உள்ளார்.

விழாவில் பேசிய யோகி பாபு, இது தனது 300-வது திரைப்படம் என்றாலும், அந்த எண்ணிக்கையை பெருமையாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கூறினார். “நடிகராக நாமே எண்ணிக்கையை வைத்து கொண்டாடக் கூடாது. நாகேஷ் சார், மனோரமா அம்மா போன்ற ஜாம்பவான்கள் நடித்த அளவுக்கு இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை,” என்றார்.

மேலும், “நான் 2016-லேயே நயன்தாராவுடன் நடித்துவிட்டேன். இனி எந்த கதாநாயகியுடன் நடிக்க வேண்டும் என்ற கவலை எனக்கில்லை. ஒரு படத்தில் கதாநாயகி யார் என்பது முக்கியமல்ல; நல்ல கதைதான் முக்கியம்,” என்று கூறிய அவர், கதைக்கு முன்னுரிமை அளிப்பதே தனது தேர்வு என்றும் வலியுறுத்தினார்.

இசையமைப்பாளர் டி. இமானை மிகவும் விரும்புவதாகக் குறிப்பிட்ட யோகி பாபு, தனது முன்னணி கதாபாத்திரப் படங்களுக்கு தொடர்ந்து அவரே இசையமைக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் பகிர்ந்துகொண்டார். இந்தப் படத்திற்காக வைத்த கோரிக்கையை உடனே ஏற்று உதவிய இமானுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இயக்குநர் ரா. ராஜ்மோகனுடனான தனது நட்பைப் பற்றியும் அவர் நினைவுகூர்ந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு கதை சொல்ல வந்த ராஜ்மோகன் பின்னர் தொடர்பில் இல்லாமல் போன நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரைத் தானே தொடர்புகொண்டு, “வா… படம் பண்ணலாம்” என்று அழைத்ததன் மூலமே ‘அர்ஜுனன் பேர் பத்து’ உருவானதாக யோகி பாபு தெரிவித்தார்.

புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும், “நல்ல கதையுடன் வாருங்கள்… நேர்மையாக உழைத்தால் நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன்,” என்று அவர் உறுதியளித்தார்.

சென்னையில் பிறந்தவர்களுக்கும் சினிமாவில் சாதிப்பது எளிதல்ல என்பதை தனது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் உணர்ந்ததாகக் கூறிய யோகி பாபு, “வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு மட்டுமல்ல, சென்னைக்காரர்களுக்கும் சினிமா ஒரு பெரிய போராட்டம்தான். இன்று மக்கள் பார்க்கும் யோகி பாபுவுக்கு முன், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், உதவி கலை இயக்குநராகவும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். அந்த அனுபவங்கள்தான் என்னை இன்று இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளன,” என்றார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “இதுவரை கமல் சார் உடன் மட்டும் தான் நடிக்கவில்லை. விரைவில் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை,” என்று தெரிவித்தார்.

மேலும், தனது வெற்றிக்கு முருகன் அருளே காரணம் என்றும், “நகைச்சுவை நடிகராகத்தான் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதுதான் எனக்கு சோறு போடுகிறது. அதனால் அந்தப் பாதையை நான் ஒருபோதும் விடமாட்டேன். அதே நேரத்தில் நல்ல கதைகள் வந்தால் முன்னணி கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடிப்பேன்,” என்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

விழாவில் தயாரிப்பாளர் தங்கப்பாண்டி வரவேற்புரை ஆற்றினார். இயக்குநர்கள் சுசீந்திரன், நித்திலன், ஷான், இசையமைப்பாளர் டி. இமான், ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா, நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, சென்ட்ராயன், மைனா நந்தினி, அனாமிகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

நிகழ்ச்சியின் நிறைவாக ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன. மேலும், யோகி பாபுவின் 300-வது திரைப்படத்தை நினைவுகூரும் வகையில் தயாரிப்பாளர் ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்ததுடன், கேக் வெட்டி படக்குழுவினர் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

யோகி பாபுவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’, வருகிற ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.