நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கிராமத்து மண்வாசனையும், அப்பா–மகன் உறவின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் ‘தகப்பன்’, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்ட குடும்ப உணர்வுப் படமாக உருவாகி வருகிறது. அப்பா–மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், ஜீவாவின் திரைப்பயணத்தில் வித்தியாசமான படைப்பாக அமையும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் காட்சிகளை நேரில் கண்ட பொதுமக்கள் பலரும் உணர்ச்சிவசப்பட்டு படக்குழுவினரை பாராட்டியதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
‘தெனாவட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுமையான கிராமத்து கதைக்களத்தில் ஜீவா மீண்டும் நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, மதுரை மண்வாசனையுடன் கூடிய கதையில் அவர் நடிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளராக, அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன்இசையமைக்கிறார். அவரது இசை, படத்தின் உணர்வுகளை மேலும் ஆழமாக வெளிப்படுத்தும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன்படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ், ஒலிப்பதிவை T. உதய் குமார்மேற்கொள்கின்றனர். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.
வலுவான கதைக்களம், திறமையான நடிகர்கள் மற்றும் அனுபவமிக்க தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகி வரும் ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல் படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் பேசப்படும் குடும்ப உணர்வுப் படங்களில் ஒன்றாகவும் அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

