வலுவான சமூகக் கருத்துடன் உருவாகியுள்ள ‘பாரிஸ் கஃபே’ – படக்குழு நம்பிக்கை

8

தண்டர் மீடியா சார்பில் கண்மணி ரங்கநாதன் மற்றும் எல்வி என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ள ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

சராஜ் சீலன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா சாய், பிபின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே. கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சதீஷ் ஜி. ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருது பெற்ற வி.ஜே. சபு ஜோசப் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன், “சிறிய பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும், ‘பாரிஸ் கஃபே’ ஒரு வலுவான சமூகக் கருத்தை பேசும் படம். சமூகத்தில் நடைபெறும் முக்கியமான ஒரு விஷயத்தை இந்தப் படம் எடுத்துரைக்கிறது. குரு சோமசுந்தரம், அனுமோல் போன்ற திறமையான நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருப்பது எங்களுக்கு பெருமை” என்றார்.

மேலும், இயக்குநர் சராஜ் சீலனின் நீண்டகால சினிமா கனவு இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளதாகக் கூறிய அவர், “இந்தக் கதைக்காக அவர் நிறைய ஆய்வுகள் செய்துள்ளார். பல ஆண்டுகளாக இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் பயணித்த அவரின் முயற்சி இன்று நனவாகியுள்ளது. அவரைப் பற்றி நினைக்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இணை தயாரிப்பாளர் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் பேசுகையில், சினிமா துறைக்கு தான் புதிது என்றாலும், இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் தனக்கு மேலும் திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

படத்தொகுப்பாளர் வி.ஜே. சபு ஜோசப் பேசுகையில், “சராஜ் சீலன் அறிமுக இயக்குநர் போலவே தெரியவில்லை. ஒவ்வொரு விஷயத்தையும் மிகுந்த தெளிவுடனும் அர்ப்பணிப்புடனும் செய்திருந்தார். பல ஆண்டுகளாக அவர் கண்ட கனவு இன்று நனவாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் மித்ரன் ஜவஹர், “ஒரு இயக்குநருக்கு அவரது மனைவியே தயாரிப்பாளராக கிடைப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம். குரு சோமசுந்தரம் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என்று வாழ்த்தினார்.

ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் பேசுகையில், இயக்குநர் சராஜ் சீலனின் நீண்டகால கனவு இந்தப் படத்தின் மூலம் நனவாகியிருப்பதாகக் கூறினார். “ஒரு இயக்குநரின் பயணம் படிப்படியாக உருவாக வேண்டும். நிலையற்ற தன்மையையும் சவால்களையும் ஏற்றுக்கொண்டு பயணிப்பவர்களுக்கே நீண்ட அனுபவமும் பயணமும் கிடைக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

நடிகை நயனா சாய் பேசுகையில், இந்தப் படத்தின் மூலம் முக்கியமான வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் கூறி, இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். குரு சோமசுந்தரம், அனுமோல் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவம் மகிழ்ச்சியளித்ததாகவும், ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நடிகர் விஜய் விஷ்வா பேசுகையில், இப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கியமான கருத்தை பேசுவதாகக் குறிப்பிட்டார். சிறிய பட்ஜெட் படங்களுக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும், அவற்றுக்கு ஆதரவாக அரசின் சார்பில் கூடுதல் தளங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

நடிகர் சாய் விக்கி, இப்படம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளதாகக் கூறினார். “வலுவான ஒரு சமூகக் கருத்தை மிகவும் மென்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் படம் இது. குரு சோமசுந்தரம் போன்ற ஒரு சிறந்த நடிகருடன் பணியாற்றியது பெரிய அனுபவம்” என்றார்.

மேலும், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் ஆணவப் படுகொலை போன்ற பிரச்சினைகள் குறித்தும் அவர் தனது கருத்தை பதிவு செய்தார். இந்த மனநிலைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், அதற்கான சிந்தனையை உருவாக்கும் படமாக ‘பாரிஸ் கஃபே’ இருக்கும் என்றும் தெரிவித்தார்.

நடிகை அர்ச்சனா குமார் பேசுகையில், “இது என்னுடைய மூன்றாவது படம் என்றாலும், இதற்குப் பின்னால் பத்து ஆண்டுகால உழைப்பு இருக்கிறது. இயக்குநர் இந்தக் கதையின் ஒவ்வொரு வரியையும் மனதில் வைத்திருந்தார். இது சமூகத்திற்கு தேவையான அழகான கதை” என்று கூறினார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கணேஷ், படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான முக்கியத்துவம் இருப்பதாகவும், படக்குழுவின் நேர்மறையான அணுகுமுறை தனக்கு மகிழ்ச்சி அளித்ததாகவும் தெரிவித்தார்.

நடிகை அனுமோல் பேசுகையில், “‘பாரிஸ் கஃபே’ மிகவும் முக்கியமான படம். சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை பேசும் படங்களில் நடிப்பதில் எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு. இயக்குநருடன் பேசியபோதே இந்தக் கதையின் மீது நம்பிக்கை ஏற்பட்டது” என்றார்.

குரு சோமசுந்தரத்துடன் நடித்த அனுபவம் குறித்து நகைச்சுவையாகப் பேசிய அவர், இருவருக்கும் இடையேயான சிறிய சண்டைகள் கூட அன்பான நட்பின் வெளிப்பாடுதான் என்றும் கூறினார். “அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அனைவரிடமும் ஒரே மாதிரியான அன்புடன் பழகுபவர். இது சிறிய படம் அல்ல; மிகவும் முக்கியமான படம்” என்றும் அனுமோல் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் கே. கிருஷ்ணகுமார் பேசுகையில், “நான் நல்ல கதைகளைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தப் படம் என்னை வந்தடைந்தது. இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த கவனத்துடன் பணியாற்றியுள்ளோம்” என்று கூறி, பாடகர்கள் மற்றும் தனது இசைக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

குரு சோமசுந்தரம் பேசுகையில், “இயக்குநர் கதை சொன்ன உடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இது ஒரு கன்டென்ட் ஓரியண்டட் படம். சமூகத்தில் பெண்களை மதிக்காத நிலை மாற வேண்டும். கௌசல்யா போன்ற இன்னொருவர் மீண்டும் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடாது. நாம் மாறினால்தான் சமூகம் மாறும். இந்தப் படம் அதுபோன்ற முக்கியமான விஷயத்தை பேசுகிறது” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கௌசல்யா சங்கர், படத்தைப் பாராட்டி பேசுகையில், “‘பாரிஸ் கஃபே’ சமூகத்திற்கு மிகவும் தேவையான படம். காதலை இயல்பாகவும், ஒரு பெண்ணின் வாழ்க்கை மற்றும் அவரது தேர்வுகளை தெளிவாகவும் இந்தப் படம் பதிவு செய்கிறது” என்றார்.

மேலும், பெண்களின் உரிமை, சமூக மாற்றம் மற்றும் ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்தும் அவர் பேசினார். “ஜாதியைத் தாண்டி மனிதநேயத்துடன் நிற்க வேண்டிய அவசியத்தை இந்தப் படம் பேசுகிறது. ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த விவாதத்திற்கு இந்தப் படம் ஒரு முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

குரு சோமசுந்தரத்தின் நடிப்பைப் பாராட்டிய அவர், “அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்கிறார்” என்று குறிப்பிட்டார்.

இயக்குநர் சராஜ் சீலன் பேசுகையில், தனது சினிமா பயணம் சிறுவயதிலேயே தொடங்கியதாகக் கூறினார். “எனது தந்தை மூலமாகவே சினிமாவை நேசிக்கத் தொடங்கினேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களைப் பற்றி பேசிக்கொண்டே வளர்ந்தேன். பாரதிராஜா, கே. பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாக்யராஜ் உள்ளிட்ட இயக்குநர்கள் எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்” என்றார்.

தனது மகளை வைத்து எடுத்த ஒரு நிமிட குறும்படம் தேர்வான பிறகே சினிமாவில் முழுமையாக பயணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததாக அவர் தெரிவித்தார். குரு சோமசுந்தரம் முதல் முறையே கதை கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், அனுமோலிடம் தொலைபேசியில் கதை கூறியபோது அவரும் உடனடியாக சம்மதித்ததாகவும் கூறி இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.

படத்தொகுப்பாளர் சபு ஜோசப், கலை இயக்குநர் தாமு, இசையமைப்பாளர் கே. கிருஷ்ணகுமார் மற்றும் ஒட்டுமொத்த நடிகர், தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்பையும் இயக்குநர் சராஜ் சீலன் பாராட்டினார்.

சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினையை உணர்வுப்பூர்வமாகவும், காதல் மற்றும் மனித உறவுகளின் பின்னணியிலும் பேசும் படமாக உருவாகியுள்ள ‘பாரிஸ் கஃபே’, விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.