கருணாஸின் 25 ஆண்டுகால சினிமா பயணத்திற்கு சிறப்பு படமாக அமையும் ‘என்ன விலை’!

24

தமிழ் திரையுலகில் நடிகராக தனது 25 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்யும் முக்கியமான தருணத்தில், நடிகர் கருணாஸ் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் தொடங்கி, தொடர்ந்து குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வரும் கருணாஸின் திரைப்பயணத்தில், ‘என்ன விலை’ திரைப்படம் முக்கியமான படமாக அமைந்துள்ளது.

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, கலாமயா சினிவெர்ஸ்நிறுவனத்தின் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் தயாரித்துள்ளனர். சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள், சுயமரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் ரசிகர்களைச் சந்திக்கிறது.

‘என்ன விலை’ திரைப்படம் குறித்து நடிகர் கருணாஸ் கூறுகையில், “திரையுலகில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், ‘என்ன விலை’ திரைப்படம் எனக்கு கிடைத்திருப்பது மறக்க முடியாத ஒன்று. உண்மையாகச் சொல்வதென்றால், கடந்த 25 ஆண்டுகளாக இப்படியொரு படத்திற்காகவும், இப்படிப்பட்ட ஒரு படக்குழுவிற்காகவும் நான் காத்திருந்தேன். இயக்குநர் சஜீவ் பழூர் என்னிடம் கதை சொன்னபோது, உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இது அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான கதை. ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகச் சிறப்பான பணியைச் செய்துள்ளனர். விருதுகளும், திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரங்களும் ஊக்கமளித்தாலும், ஒரு திரைப்படம் மக்களுக்கானது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள், சுயமரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பேசும் இப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொடும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

‘என்ன விலை’ திரைப்படத்தில் கருணாஸுடன் நிமிஷா சஜயன், விஜயலட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சித்தா தர்ஷன், மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ்உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாகவும் கவனம் பெறும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. அல்பி ஆண்டனி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில், சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பையும், தபஸ் நாயக்ஒலி வடிவமைப்பையும் கவனித்துள்ளனர்.

இப்படத்தின் கதைக்களம் மற்றும் உருவாக்கம் சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘என்ன விலை’ திரைப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. திரைப்பட விழாக்களில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது இப்படம் திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.

கருணாஸின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை நினைவுகூரும் வகையிலும், மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களது உணர்வுகளையும் மையமாகக் கொண்ட கதையை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் அமைந்துள்ள ‘என்ன விலை’, வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.