சூரியின் ‘மண்டாடி’க்கு பிரம்மாண்ட IMAX®️ வெளியீடு – ரசிகர்களுக்கு காத்திருக்கும் கடல் ஆக்ஷன் விருந்து!
நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான ‘மண்டாடி’, வரும் செப்டம்பர் 10, 2026அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படம் இந்தியா முழுவதும் உள்ள IMAX®️ திரைகளிலும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான RS Infotainment அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’, தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் கடல்சார் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்ட விளையாட்டு ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. கடலை மையமாகக் கொண்ட கதைக்களம் மற்றும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் இப்படம் உருவாகியிருப்பதால், IMAX®️ ஃபார்மேட் வெளியீடு படத்தின் திரையரங்கு அனுபவத்தை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆழ்கடல் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் இடம்பெறும் பரபரப்பான பாய்மரப் படகு காட்சிகள், கடல் சாகசங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் தீவிரமான உடல் உழைப்பு ஆகியவை IMAX®️-ன் பிரம்மாண்டமான காட்சி மற்றும் ஒலி தொழில்நுட்பத்தின் மூலம் ரசிகர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
‘மண்டாடி’ திரைப்படத்தின் IMAX®️ வெளியீடு குறித்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறுகையில், “மண்டாடி திரைப்படத்தை மிகப்பெரிய திரையில் பார்க்கும் வகையிலான ஒரு பிரமாண்டமான சினிமா அனுபவமாகவே எப்போதும் உருவாக்க நினைத்தோம். கடலின் இயற்கையான வேகம் மற்றும் பாய்மரப் படகு காட்சிகளின் பிரமாண்டம் ஆகியவை IMAX®️ வெளியீட்டை தேர்வு செய்வதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன. எங்கள் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கடின உழைப்புக்கு உரிய மரியாதையை வழங்கும் வகையில், ரசிகர்களுக்கு ஒரு ஆழமான திரையரங்க அனுபவத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி கூறுகையில், “மண்டாடி திரைப்படத்தின் தொழில்நுட்ப பிரமாண்டத்திற்கும் தீவிரமான ஆக்ஷன் காட்சிகளுக்கும் நியாயம் செய்யக்கூடிய திரையரங்க அனுபவம் தேவைப்பட்டது. நடிகர் சூரி, டூப் கலைஞர்களின் உதவியின்றி ஆபத்தான கடல் சாகசக் காட்சிகளில் நடிப்பதற்காக கடுமையான பாய்மரப் படகு பயிற்சியை மேற்கொண்டார். IMAX®️ வெளியீட்டின் மூலம் கடல் நீரின் கொந்தளிப்பு முதல் கதையின் உணர்வுப்பூர்வமான தருணங்கள் வரை ஒவ்வொரு நுணுக்கத்தையும் அதன் முழுமையான பிரமாண்டத்தில் ரசிகர்கள் அனுபவிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். சூரியுடன் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டண்ட் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர். கதிர் ISC ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில், பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். டி.ஆர்.கே. கிரண் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். படத்தின் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுக்கு பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன் மற்றும் மகேஷ் மேத்யூ ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
கடல், விளையாட்டு, ஆக்ஷன் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’, அதன் பிரம்மாண்டமான காட்சியமைப்புடன் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியா முழுவதும் IMAX®️ திரைகளிலும் இப்படம் வெளியாக உள்ளது.
