இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘த்ரிஷ்யம்’ திரைப்படத் தொடரின் இறுதி அத்தியாயமாக உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அபிஷேக் பதக் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், விஜய் சல்காவோங்கர் எதிர்கொள்ளும் புதிய சவால் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் முடிந்த இடத்திலிருந்து இப்படத்தின் கதை தொடர்கிறது. அதேவேளையில், புதிய கதைக்களம் மற்றும் முற்றிலும் புதிய திரைக்கதையுடன் இறுதி அத்தியாயம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக புதைந்திருக்கும் உண்மை மீண்டும் சல்காவோங்கர் குடும்பத்தை நோக்கித் திரும்புகிறது. இதுவரை தனது புத்திசாலித்தனமான நகர்வுகளால் எப்போதும் ஒருபடி முன்னிலையில் இருந்த விஜய் சல்காவோங்கருக்கு, இந்த முறை அரசு தரப்பிலிருந்து வலிமையான எதிர்ப்பு உருவாகிறது.
விஜய் சல்காவோங்கர் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் மீண்டும் நடித்துள்ளார். அவருக்கு எதிராக, எப்படியாவது உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற உறுதியுடன் குற்றப்பிரிவு எஸ்.பி. ராஜ்வீர் சிங் தோமர் கதாபாத்திரத்தில் ஜெய்தீப் அஹ்லாவத் களமிறங்குகிறார். இதுவரை விஜய் சந்தித்திராத வகையிலான கடுமையான சவாலை உருவாக்கும் கதாபாத்திரமாக ராஜ்வீர் சிங் தோமர் அமைந்துள்ளார்.
‘த்ரிஷ்யம் 2’ முடிவில் விடை கிடைக்காமல் இருந்த பல கேள்விகள், இந்தப் பாகத்தில் மீண்டும் முன்னிலைக்கு வருகின்றன. கடந்த காலத்தின் ரகசியங்கள் வெளிவரத் தொடங்கும் நிலையில், புதிய சக்திகளும் கதைக்குள் நுழைகின்றன. பிரகாஷ் ராஜின் வருகையும் கதையின் பரபரப்பை மேலும் அதிகரிக்கிறது. தபு, ஸ்ரியா சரண் மற்றும் ரஜத் கபூர் ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர்.
விஜய் சல்காவோங்கரின் புத்திசாலித்தனமான நகர்வுகளுக்கும், அவரைச் சுற்றி உருவாகும் புதிய விசாரணைக்கும் இடையிலான மோதலை டிரெய்லர் மையப்படுத்துகிறது. சாத்தியமே இல்லை எனத் தோன்றும் வழக்கை ராஜ்வீர் சிங் தோமர் கையில் எடுக்கும்போது, தனது குடும்பத்தை பாதுகாக்க விஜய் மேற்கொள்ளும் அடுத்தடுத்த நகர்வுகள் கதையின் முக்கிய அம்சமாக அமைகின்றன.
‘த்ரிஷ்யம்’ திரைப்படத் தொடரின் கதை தொடங்கிய கோவாவில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய் சல்காவோங்கர் மற்றும் அவரது கதையுடன் தொடர்புடைய முக்கிய இடங்களில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களுக்கு சிறப்பு திரைப்பட அனுபவம் வழங்கப்பட்டது. இதன் நிறைவாக பனாஜியில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் அஜய் தேவ்கன், தபு, ஸ்ரியா சரண், ரஜத் கபூர், ஜெய்தீப் அஹ்லாவத், மிருணாள் ஜாதவ் உள்ளிட்ட நடிகர்களுடன் இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் அபிஷேக் பதக், ஜியோஸ்டாரின் இந்தி மற்றும் ஆங்கில பொழுதுபோக்கு பிரிவின் தலைவர் மற்றும் தயாரிப்பாளர் அலோக் ஜெயின், ஸ்டார் ஸ்டுடியோ18 நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளர் அஜித் அந்தாரே, தயாரிப்பாளர் குமார் மங்கத் பதக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அபிஷேக் பதக் இயக்கியுள்ள இப்படத்தில் அஜய் தேவ்கன், தபு, ஸ்ரியா சரண், ரஜத் கபூர், ஜெய்தீப் அஹ்லாவத், பிரகாஷ் ராஜ், கமலேஷ் சாவந்த், இஷிதா தத்தா மற்றும் மிருணாள் ஜாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஸ்டார் ஸ்டுடியோ18 வழங்கும் இப்படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. அபிஷேக் பதக், ஆமில் கீயான் கான் மற்றும் பர்வீஸ் ஷேக் ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர். அலோக் ஜெயின், அஜித் அந்தாரே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘த்ரிஷ்யம்’ தொடரின் அடுத்த அத்தியாயமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.