முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகியுள்ளது. காதலின் வலி, காதலியின் பெருமை மற்றும் பிரிவின் ஏக்கம் என காதலின் மற்றொரு பக்கத்தைப் பேசும் இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அழகான காதல் கதையாக உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். “கல்லா நிக்கிறியே” பாடலுக்கு பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வரிகளை எழுத, சித் ஸ்ரீராம் தனது தனித்துவமான குரலில் பாடியுள்ளார்.
இப்படத்தின் முதல் சிங்கிளான “ஆசை வரமே” காதலின் நெருக்கத்தையும் இனிமையான தருணங்களையும் பதிவு செய்திருந்த நிலையில், “கல்லா நிக்கிறியே” காதலின் வலியையும் பிரிவின் ஏக்கத்தையும் மையமாகக் கொண்டுள்ளது. காதலில் இருக்கும் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த மெலடி, கேட்பவர்களை மெல்ல காதல் உலகிற்குள் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.
கார்த்திக் நேத்தாவின் உணர்வுப்பூர்வமான வரிகளுக்கு கோவிந்த் வஸந்தாவின் இசை மேலும் உயிர் கொடுத்துள்ளது. குறிப்பாக சித் ஸ்ரீராமின் குரல் பாடலின் உணர்வுகளை அழுத்தமாக கடத்துகிறது. காதலில் ஏற்படும் வலி மற்றும் ஏக்கத்தை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் பாடல் உருவாகியுள்ளது.
பாடலுடன் வெளியாகியுள்ள விஷுவல்களும் கவனம் ஈர்க்கின்றன. கோவிந்த் வஸந்தா மற்றும் சித் ஸ்ரீராம் இடம்பெறும் காட்சிகளுடன், ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் அழகான காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. பாடலின் உணர்வுகளுடன் படத்தின் காட்சிகளும் ஒன்றிணைவதால், “கல்லா நிக்கிறியே” பாடலுக்கு கூடுதல் அழகு சேர்த்துள்ளது.
‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.
கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார். படத்தொகுப்பை ஆர்.கே. செல்வா மேற்கொள்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்துள்ளார்.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.