TIFF 2026-ல் ‘டோரதி’… உலகளவில் முதல் திரையிடலில் எழுந்து நின்று பாராட்டிய ரசிகர்கள்!

6

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படம் 2026ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை சிக்யா என்டர்டெயின்மென்ட், தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் இடம்பெறும் TIFF திரைப்பட விழாவின் ‘சென்டர்பீஸ்’ பிரிவில் ‘டோரதி’ திரையிடப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்படும் முதல் இந்தியத் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.

டொராண்டோவில் உள்ள ஸ்காட்டியாபேங்க் திரையரங்கில் நடைபெற்ற இப்படத்தின் முதல் திரையிடலில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயினும் நிகழ்வில் பங்கேற்றனர். படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டுத் தெரிவித்தனர்.

‘டோரதி’ குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், தனக்கு நெருக்கமான இடத்தையும் கலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு உருவான கதை இது என்றும், நட்பு, பாரபட்சம் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு குறித்த கேள்விகள் உலகளாவிய பார்வையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார். TIFF திரைப்பட விழாவில் இப்படம் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்படுவது தனக்கு மிகவும் சிறப்பான தருணம் என்றும், தான் சொல்ல விரும்பிய கதையின் உணர்வுகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வாய்ப்பை இது வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அசல் பின்னணி இசை மற்றும் பாடல்களை உருவாக்கியிருப்பதும் ‘டோரதி’ படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. படத்தின் ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி’ ஆகிய இரண்டு பாடல்களும் யூடியூபில் தலா 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளன. மேலும், இந்த இரண்டு பாடல்களும் யூடியூப் இந்தியாவின் டாப் 5 டிரெண்டிங் இசை வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன.

‘டோரதி’ திரைப்படத்தின் 18 பாடல்கள் மற்றும் இசைக்கோர்வைகள் அடங்கிய முழுமையான இசைத்தொகுப்பு சென்னையில் நேரடி இசை நிகழ்ச்சியாகவும் நடத்தப்பட்டது. இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ‘டோரதி கான்சர்ட்’ நிகழ்ச்சியில் இசைக்கலைஞர்கள் சுமார் 40 நிமிடங்கள் தொடர்ந்து படத்தின் இசையை நேரடியாக இசைத்தனர்.

ஜியோ ஸ்டுடியோஸ் தலைவர் ஜோதி தேஷ்பாண்டே, ‘டோரதி’ படத்தின் கதைக்களமும் வலிமையான உணர்வுகளும் மொழி தடைகளை கடந்து உலகளாவிய பார்வையாளர்களை சென்றடையும் தன்மை கொண்டவை என தெரிவித்துள்ளார். நட்பு, அடையாளம் மற்றும் மனித கண்ணியத்தை மையமாகக் கொண்ட கதையை கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கியுள்ளதாகவும், இப்படம் TIFF திரைப்பட விழாவில் திரையிடப்படுவது தமிழ் சினிமாவிற்கும் முக்கியமான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்களான குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின், ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருப்பது தங்களது நிறுவனத்தின் பயணத்தில் முக்கியமான தருணம் என தெரிவித்துள்ளனர். மனிதநேயத்தை மையமாகக் கொண்ட இப்படம் சர்வதேச அளவில் தனது பயணத்தை டொராண்டோவில் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

TIFF திரைப்பட விழாவுடனான குணீத் மோங்கா கபூரின் 15 ஆண்டுகளுக்கும் மேலான உறவும் ‘டோரதி’ மூலம் தொடர்கிறது. ‘தட் கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்’, ‘பெட்லர்ஸ்’, ‘கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர் – பாகம் 1 மற்றும் 2’, ‘தி லஞ்ச்பாக்ஸ்’, ‘மான்சூன் ஷூட்அவுட்’, ‘கில்’, ‘யெல்லோ பஸ்’ உள்ளிட்ட அவர் தயாரித்த திரைப்படங்கள் இதற்கு முன்பு TIFF திரைப்பட விழாவில் இடம்பெற்றுள்ளன.

கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம், தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.

சர்வதேச திரைப்பட விழாவில் உலகளவில் முதல் திரையிடலை நிறைவு செய்துள்ள ‘டோரதி’, வரும் செப்டம்பர் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.