எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் – பிருத்விராஜ்; ‘டாய்ரா’ டிரெய்லர் வெளியீடு!

7

தேசிய விருது பெற்ற இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாய்ரா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், குற்றம், நீதி மற்றும் தண்டனை ஆகியவற்றை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.

ஜங்லீ பிக்சர்ஸ் மற்றும் டாக்டர் ஜெயந்திலால் கடா தலைமையிலான பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘டாய்ரா’, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு குற்றச் சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெறும் விசாரணையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.

டிரெய்லரில் மூத்த காவல்துறை அதிகாரிகளாக கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் அறிமுகமாகின்றனர். டிசிபி அஜூனி கோலி என்ற கதாபாத்திரத்தில் கரீனா கபூரும், டிசிபி ராமன் குமார் கதாபாத்திரத்தில் பிருத்விராஜும் நடித்துள்ளனர். ஒரே காவல்துறை அமைப்புக்குள் பணியாற்றினாலும், கடமை மற்றும் நீதியை அணுகும் விதத்தில் இருவருக்கும் மாறுபட்ட பார்வைகள் இருப்பது டிரெய்லரில் வெளிப்படுகிறது.

ஒரு குற்ற வழக்கின் விசாரணை தீவிரமடையும்போது, உண்மை, நீதி, தீர்ப்பு என அனைத்தும் பல்வேறு கோணங்களில் கேள்விக்குள்ளாகின்றன. புதிய தகவல்கள் வெளியாகும்போதெல்லாம் வழக்கைப் பற்றிய பார்வையே மாறும் வகையில் டிரெய்லர் பரபரப்பை உருவாக்குகிறது. ஒரு கதை எவ்வளவு வேகமாகத் தீர்ப்பாக மாறுகிறது, எதை உண்மை என நம்புவது, நீதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது போன்ற கேள்விகளையும் இப்படம் முன்வைக்கிறது.

யஷ் கேஸ்வானி, சிமா அகர்வால் மற்றும் மேக்னா குல்சார் ஆகியோர் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். டிரெய்லரில் ஜிதேந்திர ஜோஷி, க்ஷிதி ஜோக், கன்வல்ஜீத் சிங், சந்தீப் குல்கர்னி மற்றும் த்ருப்தி கம்கர் உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் அறிமுகமாகின்றனர்.

‘டாய்ரா’ குறித்து கரீனா கபூர் கான் பேசுகையில், மேக்னா குல்சாருடன் பணியாற்றியது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும், டிசிபி அஜூனி கோலி கதாபாத்திரம் இதுவரை தான் பெரிதாக ஆராயாத ஒரு களத்திற்குள் அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிருத்விராஜ் சுகுமாரனுடன் இணைந்து நடித்தது இந்தப் பயணத்தை மேலும் சிறப்பாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிருத்விராஜ் சுகுமாரன் கூறுகையில், டிசிபி ராமன் குமார் கதாபாத்திரத்தின் வெளிப்புற அமைதிக்குப் பின்னால் இருக்கும் சிக்கலும், விசாரணையின்போது அவர் எதிர்கொள்ளும் கேள்விகளுமே தன்னை அந்த கதாபாத்திரத்திடம் ஈர்த்ததாக தெரிவித்துள்ளார். மேக்னா குல்சாருடன் பணியாற்றிய அனுபவமும், கரீனா கபூர் கானுடன் இணைந்து நடித்ததும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் மேக்னா குல்சார், ‘டாய்ரா’ கருப்பு, வெள்ளை என தெளிவான இரு பக்கங்களைக் கொண்ட கதை அல்ல என்றும், கதாபாத்திரங்கள் தங்களது முடிவுகளை எடுத்து, அதன் விளைவுகளுடன் வாழும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், படத்தைப் பார்த்த பிறகு பார்வையாளர்கள் தங்களுக்கான புரிதலை உருவாக்கிக்கொள்ளும் வகையில் இப்படம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘தல்வார்’ மற்றும் ‘ராஸி’ படங்களைத் தொடர்ந்து மேக்னா குல்சாருடன் ஜங்லீ பிக்சர்ஸ் இணையும் மூன்றாவது திரைப்படம் ‘டாய்ரா’. இப்படம் மூலம் ஜங்லீ பிக்சர்ஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

பென் மருதர் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் ‘டாய்ரா’ திரைப்படம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதிதிரையரங்குகளில் வெளியாகிறது.