அக்.1 முதல் திரையரங்குகளில் ‘ஏழு கடல் ஏழுமலை’ – கேரள உரிமையை கைப்பற்றிய துல்கர்!

6

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழுமலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் ராம் இயக்கியுள்ள இப்படத்தில் நிவின்பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஒரு எலியும் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் இடம்பெற்றுள்ளது.

உணர்வுப்பூர்வமான கதைகளை தனக்கே உரிய பாணியில் வழங்கி வரும் இயக்குநர் ராம், ‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின்பாலி மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகன் வரிசையில் கவனம் பெற்றுள்ள சூரி இருவரும் இணைந்து நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இருவரது கூட்டணி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்நிலையில், நிவின்பாலி நடித்த திரைப்படங்கள் சமீப காலங்களில் பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதும் ‘ஏழு கடல் ஏழுமலை’ மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘சர்வம் மாயா’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்ததாகவும், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் ரூ.300 கோடி வசூலை கடந்ததாகவும் படக்குழு குறிப்பிட்டுள்ளது. தமிழ் ரசிகர்களிடமும் நிவின்பாலிக்கு கிடைத்துள்ள வரவேற்பு அவரது நட்சத்திர அந்தஸ்துக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

மறுபுறம், சமீபத்தில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றியின் மூலம் சூரியும் ரூ.100 கோடி வசூல் படங்களின் பட்டியலில் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ள நிவின்பாலி மற்றும் சூரி இருவரும் இணைந்துள்ள ‘ஏழு கடல் ஏழுமலை’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனிடையே, படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான வேஃபாரர் ஃபிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் கேரளாவில் ‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தின் வெளியீட்டிற்கு கூடுதல் கவனம் கிடைத்துள்ளது.

துல்கர் சல்மான் தயாரித்து வெளியிட்ட ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ திரைப்படம் ரூ.300 கோடி வசூலை கடந்ததாக படக்குழு குறிப்பிட்டுள்ள நிலையில், வேஃபாரர் ஃபிலிம்ஸ் மூலம் ‘ஏழு கடல் ஏழுமலை’ கேரளாவில் வெளியாக இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை ஒரே நேரத்தில் சென்றடையும் வகையில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழுமலை’, அக்டோபர் 1ஆம் தேதி கேரளா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. நிவின்பாலி – சூரி கூட்டணி, இயக்குநர் ராமின் தனித்துவமான கதை சொல்லல் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை என பல்வேறு அம்சங்களுடன் வெளியாகும் இப்படம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.