ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் வி. அருண்குமார் (எ) அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படம், சினிமா தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒரே நேரத்தில் அதிகமான நபர்களை நிகழ்நேரத்தில் (Real-Time) Motion Capture செய்ததற்காக இப்படம் கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெற்றுள்ளது.
இந்த சாதனை கடந்த பிப்ரவரி 2026-ல் நிகழ்த்தப்பட்டது. ஒரே Capture Volume-க்குள் 37 கலைஞர்களை ஒரே நேரத்தில் நிகழ்நேரத்தில் Motion Capture செய்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை வெவ்வேறு வயதினரைச் சேர்ந்த 37 கலைஞர்கள் ஒரே அமர்வில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் செப்டம்பர் 15, 2026 அன்று வழங்கப்பட்டது. கின்னஸ் உலக சாதனையின் மூத்த நடுவர் ஸ்வப்னில் டாங்ரிகர், அதிகாரப்பூர்வ சான்றிதழை அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோரிடம் வழங்கினார். படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்ற நெருக்கமான விழாவில் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த சாதனை குறித்து அல்லு அர்ஜுன் கூறுகையில், சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தி உலக அளவில் புதிய அளவுகோலை உருவாக்கும் இந்த சாதனை, ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் பெருமையான தருணம் என தெரிவித்துள்ளார். இயக்குநர் அட்லீயின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதல், படக்குழுவினரின் உழைப்பு மற்றும் சன் பிக்சர்ஸின் தொடர் ஆதரவு இல்லாமல் இந்த சாதனை சாத்தியமாகியிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் அட்லீ கூறுகையில், சிறுவயதில் கின்னஸ் உலக சாதனைகள் குறித்து வியப்புடன் கேட்டிருந்ததாகவும், ஒரு நாள் தாமும் ஒரு சாதனையை உருவாக்குவோம் என்று அப்போது நினைத்துப் பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒரே படப்பிடிப்பில் 37 Motion Capture Assets-ஐ ஒன்றிணைத்து இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது கனவு போன்ற அனுபவமாக இருப்பதாகவும், பெரிய கனவுடன் முழுமையான நம்பிக்கையோடு ஒன்றிணைந்து உழைத்தால் சாத்தியமற்றதாகத் தோன்றுவதையும் சாத்தியமாக்க முடியும் என்பதற்கு இந்த சாதனை ஒரு உதாரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
‘ராக்கா’ திரைப்படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த பிரம்மாண்டமான Motion Capture பணியில், 37 கலைஞர்களின் தனித்தனி நடிப்பையும் ஒரே நேரத்தில் துல்லியமாகப் பதிவு செய்து, ஒவ்வொருவரின் நடிப்பின் தனித்தன்மையும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது.
இதற்காக படத்தின் VFX தயாரிப்பாளர், ‘ராக்கா’ படத்தின் பிரம்மாண்டத்திற்கும் தொழில்நுட்பத் தேவைகளுக்கும் ஏற்ப புதிய Motion Capture Pipeline மற்றும் Workflow-ஐ உருவாக்கியுள்ளார். கின்னஸ் உலக சாதனை முயற்சிக்காக 92 Optical Motion Capture Cameras பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் Capture, Calibration, Networking, Synchronisation, Real-Time Unreal Visualisation, Witness Cameras, Facial Capture உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒரே Capture Volume-ல் 37 பேரின் இயக்கங்களையும் ஒரே நேரத்தில் பதிவு செய்வதற்கான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு இந்த முயற்சியின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பு, அட்லீயின் தொலைநோக்குப் பார்வை, அல்லு அர்ஜுனின் அர்ப்பணிப்பு, Apple Art Studio-வின் தொழில்நுட்பத் திறன், படத்தின் மேம்பட்ட VFX தொழில்நுட்பம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் கூட்டு முயற்சி ஆகியவை இந்த சாதனை சாத்தியமாக முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
இந்த கின்னஸ் உலக சாதனை மூலம் ‘ராக்கா’ திரைப்படம் இந்திய சினிமாவின் தொழில்நுட்பத் திறனை சர்வதேச அளவில் எடுத்துக்காட்டும் முக்கியமான முயற்சியாக அமைந்துள்ளது. இந்திய படைப்பாளிகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமையுடன் உருவாகியுள்ள இந்த சாதனை, நவீன திரைப்படத் தொழில்நுட்பத்தில் இந்திய சினிமா மேற்கொண்டு வரும் புதிய முயற்சிகளுக்கும் கவனத்தை ஈர்த்துள்ளது.
படத்தின் கதை மற்றும் வெளியீடு தொடர்பான கூடுதல் தகவல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ‘ராக்கா’ திரைப்படத்தின் கின்னஸ் உலக சாதனை அதன் பிரம்மாண்ட உருவாக்கத்திற்கு மேலும் ஒரு முக்கிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.
