அப்போலோ மருத்துவமனைகளின் ₹8,600 கோடி விரிவாக்கத் திட்டம் – திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா நியமனம்!

7

இந்தியா முழுவதும் தனது மருத்துவக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் உபாசனா காமினேனி கொனிடெலாவை Director – Projects பொறுப்பில் நியமித்துள்ளது. அப்போலோவின் தலைமை நிர்வாகம், மருத்துவக் குழுக்கள் மற்றும் திட்டப் பங்குதாரர்களுடன் இணைந்து, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள மருத்துவமனைத் திட்டங்களின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் பணிகளில் உபாசனா கவனம் செலுத்த உள்ளார்.

அப்போலோ மருத்துவமனைகளின் தற்போதைய விரிவாக்கத் திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட திட்டச் செலவு சுமார் ₹8,600 கோடி ஆகும். இதில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சுமார் ₹1,565 கோடி மதிப்பிலான Brownfield Expansion Projects அடங்கும்.

இந்த விரிவாக்கத் திட்டத்தின் கீழ் புதிய மருத்துவமனைகளை அமைத்தல், ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகளின் திறனை அதிகரித்தல் மற்றும் அவற்றை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நாட்டின் முக்கிய நகரங்களில் அப்போலோவின் மருத்துவச் சேவைத் திறனை அதிகரிப்பதுடன், வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறப் பகுதிகளில் புதிய மருத்துவ வசதிகளை உருவாக்குவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

வெளியிடப்பட்டுள்ள திட்ட விவரங்களின்படி, ஹைதராபாத், டெல்லி NCR, சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும், லக்னோ, வாரணாசி, இந்தோர், குவாஹாத்தி, ராஞ்சி உள்ளிட்ட நகரங்களிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. உபாசனாவின் நேரடிப் பொறுப்பின் கீழ் வரும் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான பட்ஜெட் விவரங்கள் அப்போலோ மருத்துவமனைகளால் பின்னர் உறுதி செய்யப்படும்.

உபாசனாவின் முக்கியப் பொறுப்புகளில், புதிய மருத்துவமனைகளின் திட்டமிடல் மட்டுமின்றி, ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான பகுதிகளை மேம்படுத்துவதும் இடம்பெறுகிறது. நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனைகளுக்குள் எளிதாகச் செல்லும் வகையில் தெளிவான வழிகாட்டிப் பலகைகள், எளிதான வழித்தடங்கள், திறமையான மருத்துவப் பிரிவுகளின் அமைப்பு மற்றும் வசதியான நோயாளி அனுபவத்தை உருவாக்கும் வகையிலான வடிவமைப்பு ஆகியவற்றிலும் அவர் கவனம் செலுத்த உள்ளார்.

மேலும், வடிவமைப்பு தொடங்கி மருத்துவமனை திறப்பு வரை அனைத்து கட்டங்களிலும் திட்டப் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் திட்ட மேலாண்மை நடைமுறைகள், அறிக்கை தயாரித்தல் மற்றும் பல்வேறு குழுக்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் பணிகளிலும் உபாசனா ஈடுபட உள்ளார்.

இந்த விரிவாக்கத்தின் மூலம் உயர்தரமான மருத்துவச் சேவைகளை மக்களுக்கு மேலும் எளிதாகவும் அணுகக்கூடிய வகையிலும் கொண்டு செல்வதை அப்போலோ நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மையங்களாக மட்டுமின்றி, நோய்த் தடுப்பு மற்றும் ஆரம்பகட்ட நோய் கண்டறிதல் உள்ளிட்ட தொடர் சுகாதாரச் சேவைகளையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளன.

அதேபோல், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பல்வேறு மருத்துவத் துறைகளில் பணியாற்றும் திறமையான நிபுணர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த விரிவாக்கம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணுகக்கூடிய மற்றும் மலிவான மருத்துவச் சேவைகளுடன், சிறந்த மருத்துவத் தரத்தை இணைத்து வழங்குவதன் மூலம், உலகம் முழுவதிலுமிருந்து நோயாளிகள் நம்பிக்கையுடன் சிகிச்சைக்காக இந்தியாவைத் தேர்வு செய்யும் வகையில் நாட்டின் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கும் பங்களிப்பதே அப்போலோவின் நீண்டகால நோக்கமாக உள்ளது.

இதுகுறித்து உபாசனா காமினேனி கொனிடெலா கூறுகையில், “எனது தாத்தா டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, உலகத் தரம் வாய்ந்த மருத்துவச் சேவைகள் இந்திய மக்களுக்கு எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அப்போலோவை உருவாக்கினார். அவர் கொண்டிருந்த அந்த நம்பிக்கையை நாம் உருவாக்கும் புதிய மருத்துவமனைகளிலும், மேம்படுத்தும் மருத்துவ வசதிகளிலும் தொடர்ந்து கொண்டு செல்வதே எனது பொறுப்பு.

ஒரு மருத்துவமனையின் சிறந்த வடிவமைப்பு என்பது மனிதர்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். நோயாளிகள் எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் தங்களுக்குத் தேவையான இடத்தை எளிதில் கண்டறிய வேண்டும். குடும்பத்தினர் ஆதரவுடன் இருப்பதாக உணர வேண்டும். அதே நேரத்தில், மருத்துவர்கள் மற்றும் சிகிச்சைக் குழுவினர் சிறப்பான மருத்துவச் சேவையை வழங்குவதற்கு உதவும் வகையில் மருத்துவமனையின் இடவசதிகள் அமைக்கப்பட வேண்டும்.

அப்போலோ தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு திட்டமும் அந்தப் பகுதி மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். எங்களுடன் பணியாற்றும் மக்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், மக்கள் தங்களது உடல்நலத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ள உதவ வேண்டும்.

சிந்தனைமிக்க வடிவமைப்பு, அக்கறையுடன் வழங்கப்படும் மருத்துவச் சேவை மற்றும் இந்தியாவின் மருத்துவத் துறையின் சிறப்பு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து உலகிற்கு நாம் என்ன சாதிக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் மிகப்பெரிய வாய்ப்பு நமக்கு உள்ளது” என்றார்.