விஜய் சேதுபதியின் பல முகங்களை காட்டும் ‘பத்தா’ டிரெய்லர் – எதிர்பார்ப்பை எகிறவைக்கும் காட்சிகள்!

9

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை Star Studio18, A for Apple Studios மற்றும் Cine 1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஏற்கனவே டீசர் மற்றும் பாடல்கள் மூலம் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இரண்டு சிறுவர்கள் ‘ரௌடி பத்தா’வின் வீர பிரதாபங்களைப் பற்றி பேசுவதுடன் டிரெய்லர் தொடங்குகிறது. யாராலும் தொட முடியாதவர், அசைக்க முடியாதவர் என பத்தாவின் ஆளுமை குறித்து சுற்றியிருப்பவர்கள் பேச, அதற்கேற்ற வகையில் இடம்பெறும் காட்சிகள் அவரது கதாபாத்திரத்தின் மீதான ஆர்வத்தை உருவாக்குகின்றன.

தொடர்ந்து வரும் ஆக்‌ஷன் காட்சிகள், பத்தாவின் அதிரடியான முகத்தை அறிமுகப்படுத்துகின்றன. ஆனால், அதே பத்தா குடும்பத்துடன் வாழும் ஒரு குடும்பஸ்தனாகவும் இருப்பது அடுத்தடுத்த காட்சிகளில் வெளிப்படுகிறது. ரௌடி என அறிமுகமாகும் கதாபாத்திரத்திற்குள் இருக்கும் மற்றொரு மனிதனை காட்டும் வகையில் டிரெய்லர் நகர்கிறது.

ஆக்‌ஷன் நிறைந்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்க வைக்கும் டிரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளில் நகைச்சுவை நிறைந்த தருணங்களுடன் வேறொரு பாதைக்கு செல்கிறது. பத்தாவைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள், அவருடைய வெவ்வேறு முகங்கள் மற்றும் அவரைச் சுற்றியுள்ள மனிதர்களுடனான உறவுகள் என பல்வேறு அம்சங்கள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, டிரெய்லரின் இறுதியில் இடம்பெறும் ‘செல்லமே மகளே’ பாடல் காட்சிகள் படத்தின் உணர்வுப்பூர்வமான பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றன. “அப்பா வந்திருவார்ல அம்மா?” என சிறுமி கேட்கும் காட்சியைத் தொடர்ந்து, சிறையில் இருக்கும் பத்தாவை காட்டுவதுடன் டிரெய்லர் நிறைவடைகிறது. இதன் மூலம் பத்தாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது, அவர் ஏன் சிறையில் இருக்கிறார் என்ற கேள்விகள் எழுகின்றன.

80-களின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் காலகட்டத்தையும் டிரெய்லர் அழுத்தமாக பதிவு செய்கிறது. அந்தக் காலத்தை பிரதிபலிக்கும் உடைகள், காட்சியமைப்பு, கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை படத்தின் உலகத்தை உருவாக்குகின்றன.

பத்தா உண்மையில் யார்?, அவரது பல்வேறு முகங்களுக்குப் பின்னால் இருக்கும் கதை என்ன?, ரௌடி பத்தா எப்படி குடும்பஸ்தனாக மாறுகிறார்?, அவர் ஏன் சிறையில் இருக்கிறார்? என பல கேள்விகளை டிரெய்லர் எழுப்புகிறது. அதே நேரத்தில், கதையின் முக்கிய முடிச்சுகளை வெளிப்படுத்தாமல், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் டிரெய்லர் அமைந்துள்ளது.

ஆக்‌ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வு மற்றும் மர்மம் ஆகிய அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகியுள்ள ‘பத்தா’, விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றங்களையும் கதாபாத்திரத்தின் பல்வேறு பரிமாணங்களையும் மையமாகக் கொண்டிருப்பது டிரெய்லர் மூலம் தெரிய வருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ‘ஜெய் பீம்’ புகழ் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கேஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பை கவனித்துள்ளார். அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் வித்தியாசமான கதாபாத்திரத் தோற்றங்கள், 80-களின் பின்னணி, ஆக்‌ஷன், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் என பல அம்சங்களுடன் வெளியாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர், படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.