பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் இசைப்பயணம், ஸ்ரீ ராமரைப் போற்றும் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ மூலம் தொடங்கியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் பாடலை சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் பாடியுள்ளனர். கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
ஸ்ரீ ராமரின் கருணை, பாதுகாப்பு மற்றும் தர்மத்தின் மீதான அர்ப்பணிப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, ஆரத்தியின் ஆன்மீகத் தன்மையையும் திரையிசையின் அழகையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைந்துள்ளது. பாடல் முழுவதும் ஒலிக்கும் ஸ்ரீ ராமரின் திருநாமம், பாடலுக்கு பக்தி நிறைந்த உணர்வை வழங்குகிறது.
‘ராமாயணம்’ திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான நமித் மல்ஹோத்ரா, ஸ்ரீ ராமருடன் தலைமுறை தலைமுறையாக மக்கள் கொண்டிருக்கும் வலுவான பிணைப்பிலிருந்தே ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் உருவானதாக தெரிவித்துள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டாலும், ‘ராமாயணம்’ திரைப்படத்தின் உண்மையான அடித்தளம் அதன் உணர்வு, மதிப்புகள் மற்றும் பக்தியில்தான் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ ராமரை வெறும் வழிபாட்டுக்குரியவராக மட்டுமல்லாமல், தங்களுக்குள் இருக்கும் பாதுகாவலர், வழிகாட்டி மற்றும் வலிமையின் ஆதாரமாகக் கொண்டாடும் வகையில் முதல் பாடல் அமைய வேண்டும் என்பதே படக்குழுவின் நோக்கம் என்றும் நமித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், ஸ்ரீ ராமரின் திருநாமத்தை எளிமையாகவும் வலிமையாகவும் மீண்டும் மீண்டும் உச்சரிப்பதே ‘ஜெய் ஜெய் ராம்’ பாடலின் மையம் என தெரிவித்துள்ளார். பக்தி உணர்வு மாறாமல், கேட்பவர்களின் மனதில் நீண்ட காலம் ஒலிக்கும் பிரார்த்தனையாகவும், அதே நேரத்தில் ஒரு திரைப்பாடலாகவும் இதை உருவாக்க முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஜெய் ஜெய் ராம்’ பாடலின் ஆன்மீக உணர்வை பாடகர்களான சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் தங்களது குரல் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். ஏ.ஆர். ரஹ்மானின் இசையுடன் இணைந்து, பாடல் திரைப்படத்தின் ஆன்மீக உலகத்திற்கான முதல் அறிமுகமாக அமைந்துள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீ ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர்.
நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், எட்டு முறை அகாடமி விருது வென்ற DNEG நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் கூட்டுத் தயாரிப்பில் இப்படத்தை உருவாக்கி வருகிறது. இந்தியாவைத் தவிர உலகம் முழுவதும் இப்படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது.
5,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகி வருகிறது. இந்திய இதிகாசக் கதையை நவீன தொழில்நுட்பம் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புடன் உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் முதல் பாகமான ‘ராமாயணம் – பாகம் 1’, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானதைத் தொடர்ந்து, ‘ராமாயணம்’ படத்தின் பிரம்மாண்டமான திரை உலகம், கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் அடுத்தடுத்த பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.