மாரனாடு கருப்பணசாமி கோயிலில் பிரம்மாண்டமாக தொடங்கியது தனுஷின் D56!

6

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56-ன் படப்பிடிப்பு பணிகள் இன்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள இப்படம், அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sithara Entertainments சார்பில் நாக வம்சி, Primark Productions சார்பில் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios சார்பில் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மாரனாடு கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் D56 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. இந்த பூஜை நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மேலும், பொதுமக்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்டு, படப்பிடிப்பு பணிகள் கோலாகலமாக தொடங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் வடிவேலு, “மாரனாடு கருப்பசாமி கோயில் மிகவும் விசேஷமான ஒரு கோயில். இவ்வளவு பெரிய கூட்டத்தையும் மக்களின் அன்பையும் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனுஷ் சாரின் படத்துக்கான பூஜை இவ்வளவு பெரிய விழாவாக நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவே மாநாடு போல இருக்கிறது” என்றார்.

மேலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம் கிடைத்திருப்பதாகக் கூறிய வடிவேலு, சினிமாவில் சில விஷயங்கள் சரியான நேரத்தில் அமைய வேண்டும் என்றும், தற்போது இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

D56 சாதாரணமான படம் இல்லை என்றும், அரசியல் தாக்கம் இல்லாத தனித்துவமான கதையை கொண்ட படம் என்றும் குறிப்பிட்ட வடிவேலு, கதையை கேட்டபோது பெருமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்ததாகத் தெரிவித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். மேலும், படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், விரைவில் தலைப்பு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, வழக்கமாக திரைப்படங்களின் பூஜை சென்னையில் நடைபெறும் நிலையில், மாரனாடு கருப்பசாமியின் அருளோடும், மக்களின் அன்புக்கு முன்னாலும் இப்படத்தின் பூஜை நடைபெறுவது மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவை சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர் எனப் பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா, ‘லப்பர் பந்து’ படத்தின் மூலமே அவரது திறமை ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும் என்றும், D56 படத்திலும் அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளதாகவும் கூறினார். நம்முடைய மண்ணின் கதையை அழகாக உருவாக்கியிருப்பதாகவும், இப்படத்தை ரசிகர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தனுஷ், வடிவேலு, பிரித்தி முகுந்தன், விஜய்குமார் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் படத்தில் இணைந்திருப்பதாகவும், சாய் அபயங்கர் இசையமைப்பதாகவும் குறிப்பிட்ட எஸ்.ஜே.சூர்யா, தமிழரசன் பச்சமுத்து சிறந்த ஒரு அணியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

நடிகர் தனுஷ் பேசும்போது, “இந்த பூஜை, இன்று பின்னால் இருக்கும் சாமியையும், முன்னால் இருக்கும் உங்களையும் நம்பித்தான் நடைபெறுகிறது. இன்று நான் அதிகம் பேச விரும்பவில்லை. அனைவரும் இங்கு நடைபெறும் கிடா விருந்தில் வயிறார சாப்பிட்டு, பத்திரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும்” என்று கூறினார்.

மேலும், விரைவில் ‘ஓம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பதாகத் தெரிவித்த தனுஷ், D56 படத்தின் பூஜைக்கு திரண்டு வந்து அன்பையும் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

D56 படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பிரித்தி முகுந்தன் மற்றும் விஜய்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளம் தலைமுறையினர் மத்தியில் தனது இசையின் மூலம் கவனம் ஈர்த்து வரும் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தனுஷ் – சாய் அபயங்கர் கூட்டணி இணைவதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழரசன் பச்சமுத்து இயக்கும் அடுத்த படம் என்பதுடன், தனுஷின் 56வது திரைப்படம், எஸ்.ஜே.சூர்யா மற்றும் வடிவேலு போன்ற முன்னணி நடிகர்களின் கூட்டணி, சாய் அபயங்கரின் இசை என பல்வேறு அம்சங்கள் D56 படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து படப்பிடிப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகும் நிலையில், D56 திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.