நடிகர் ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் சிறப்பு BTS காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. ராமர் கதாபாத்திரத்திற்காக ரன்பீர் மேற்கொண்ட தயாரிப்புகள் மற்றும் அந்தக் கதாபாத்திரமாக தன்னை மாற்றிக்கொண்ட விதம் குறித்து இந்த BTS காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு நெருக்கமான பார்வையை வழங்குகின்றன.
இந்த BTS வீடியோவில், ‘ராமாயணா’ போன்ற பிரம்மாண்டமான இதிகாசத் திரைப்படத்திற்கு சரியான நடிகரைத் தேர்வு செய்வதன் முக்கியத்துவம் குறித்து இயக்குநர் நிதேஷ் திவாரி பேசியுள்ளார். ராமாயணத்தின் மீது கோடிக்கணக்கான மக்களுக்கு ஆழமான நம்பிக்கையும் உணர்வுப்பூர்வமான தொடர்பும் இருப்பதால், ராமர் கதாபாத்திரத்திற்கான நடிகரைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர், அந்தக் கதாபாத்திரத்திற்கு உரிய மரியாதையுடனும், தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்தும் நடித்ததாகவும் நிதேஷ் திவாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த BTS காட்சிகளில் தசரதராக நடிக்கும் அருண் கோவில், சீதையாக நடிக்கும் சாய் பல்லவி மற்றும் லட்சுமணராக நடிக்கும் ரவி துபே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திற்காக மேற்கொண்ட தயாரிப்புகள் குறித்தும், அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் எவ்வாறு பொருந்துகிறார் என்பது குறித்தும் அவர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
நடிகர்களின் தோற்ற மாற்றங்கள், கதாபாத்திரங்களுக்கான தயாரிப்புகள், முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் இந்த BTS காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் ‘ராமாயணா’ திரைப்படம் உருவாகும் விதம் குறித்த ஒரு பார்வையும் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.
மேலும், ‘ராமாயணா’ திரைப்படத்தை உலகளவில் கொண்டு செல்லும் நோக்கில் கிழக்கு மற்றும் மேற்கத்திய திரையுலகின் முன்னணி திறமையாளர்களை தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா ஒருங்கிணைத்துள்ளதும் BTS காட்சிகளில் இடம்பெற்றுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆக்ஷன் இயக்குநர் டெர்ரி நோட்டரி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திறமையாளர்கள் இப்படத்தின் உருவாக்கத்தில் இணைந்துள்ளனர்.
இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ஒவ்வொரு புதிய அப்டேட் வெளியாகும் போதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், ராக்கிங் ஸ்டார் யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணராகவும் நடிக்கின்றனர்.
நமித் மல்ஹோத்ராவின் பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், 8 முறை ஆஸ்கர் விருது பெற்ற DNEG மற்றும் யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. உலகளவில் இப்படத்தை சோனி பிக்சர்ஸ் விநியோகிக்கிறது. இந்தி பேசும் சந்தைக்கான விநியோகப் பணிகளை தர்மா புரொடக்சன்ஸ் மேற்கொள்கிறது.
இப்படம் உலகளவில் IMAX வடிவில் வெளியாகவுள்ளது. ‘ராமாயணா’ முதல் பாகம் 2026 தீபாவளியிலும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளியிலும் வெளியாகிறது. இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.