கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவான ‘என்ன விலை’ திரைப்படம், அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனிக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற விழாவில், ஒளிப்பதிவாளர் சார்பில் படத்தின் தயாரிப்பாளர் அனுகோபால் வேணுகோபாலன் விருதைப் பெற்றுக்கொண்டார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பாழூர் இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், ராமேஸ்வரத்தின் கடலோரப் பின்னணியில் ஒரு மீனவரின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. நீதி, கண்ணியம், மன உறுதி ஆகியவற்றை மையப்படுத்திய இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கதையின் உணர்வுகளையும், கடலோர வாழ்வியலின் தன்மையையும் காட்சிகளின் வழியாக வெளிப்படுத்தியுள்ள ஒளிப்பதிவுக்கு தற்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த விருது, ‘என்ன விலை’ திரைப்படத்தின் சர்வதேசத் திரைப்பட விழா பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தமிழ் சினிமாவை உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்லும் கலாமயா சினிவெர்ஸின் முயற்சிக்கும் இது குறிப்பிடத்தக்க பெருமையைச் சேர்த்துள்ளது.
விருது குறித்து ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி கூறுகையில், “அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெறுவது எனக்குப் பெருமையான தருணம். ‘என்ன விலை’ திரைப்படம் அதன் கதைக்களத்துடனும் கதாபாத்திரங்களுடனும் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. அந்த உலகத்தை காட்சிகளாக மாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெரும் பாக்கியம். இந்தப் பெருமையை இயக்குநர் சஜீவ் பாழூர், தயாரிப்பாளர்கள் ஜித்தேஷ் விஸ்வம்பரன், அனுகோபால் வேணுகோபாலன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருடனும் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.
படத்தின் தயாரிப்பாளர்கள் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் கூறுகையில், “ஆல்பி ஆண்டனியின் ஒளிப்பதிவுக்குக் கிடைத்துள்ள இந்தச் சர்வதேச அங்கீகாரம், ‘என்ன விலை’ படக்குழுவினர் அனைவருக்கும் மிகுந்த பெருமையை அளிக்கிறது. படத்தின் காட்சி மொழிக்கும், ஒட்டுமொத்தக் குழுவினரின் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதைப் பார்க்கிறோம்” என்று தெரிவித்தனர்.
ராமேஸ்வரத்தின் வாழ்வியலையும், ஒரு மீனவரின் போராட்டத்தையும் திரையில் பதிவு செய்துள்ள ‘என்ன விலை’ திரைப்படத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
