நட்டி நட்ராஜ் வெளியிட்ட ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் – படக்குழுவினருக்கு வாழ்த்து!

8

 

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் நட்டி நட்ராஜ் இந்தக் க்ளிம்ப்ஸை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்து நடித்த மு. கார்த்திகேசன், தனது எம்.கே. பிலிம் மீடியா ஒர்க்ஸ் பி.லிட் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக ‘அறுவடை’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ள அவர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்ற அடையாளங்களைத் தொடர்ந்து இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

இப்படத்தில் மு. கார்த்திகேசனுக்கு ஜோடியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். பருத்திவீரன் சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ராஜசிம்மன், கஜராஜ், அனுராமி, தீபா பாஸ்கர், கவிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் ஏற்படும் சிறிய பிரச்சினை, எவ்வாறு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கிறது என்பதை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்திற்கு ‘அறுவடை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக இயக்குநர் மு. கார்த்திகேசன் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் குழுவில் பிரேம்குமார் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகு ஸ்ரவன் குமார் இசையமைத்துள்ளார். கே.கே. விக்னேஷ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ஏ.எம்.ஜே நடன இயக்கத்தையும், ஜோதின் விஷாக் – அனுப்ஷா கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். டி.ஆர் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஜெயன் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் க்ளிம்ப்ஸை நடிகர் நட்டி நட்ராஜ் வெளியிட்டு படக்குழுவினருக்கு உற்சாகம் அளித்துள்ளார். க்ளிம்ப்ஸில் இடம்பெற்றுள்ள காட்சிகளைப் பார்த்த அவர், படக்குழுவினரின் முயற்சியை வெகுவாகப் பாராட்டியதுடன், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை தீபத் திருநாளில் வெளியாகியுள்ள ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.