‘96’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இயக்குநர் பிரேம் குமார், ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் மூலம் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியை மீண்டும் நிரூபித்தவர். தற்போது இவரது இயக்கத்தில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் 2027 ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு வெளியீடாகத் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படம் திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள் மற்றும் இயல்பான நடிப்பால் இந்திய அளவில் கவனம் ஈர்த்து வரும் ஃபஹத் ஃபாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு தற்போது அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக ஷிவதா நடிக்கிறார். மேலும், சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தொழில்நுட்பக் குழுவில் மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கோவிந்தராஜ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். குமார் கங்கப்பன் கலை இயக்கத்தையும், மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளையும் வடிவமைக்கின்றனர்.
பிரேம் குமார் – ஃபஹத் ஃபாசில் முதன்முறையாக இணைந்துள்ள இந்தத் திரில்லர் கூட்டணி, புத்தாண்டு வெளியீடாக ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. ‘அசரீரி’ திரைப்படம் 2027 ஜனவரி 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.