மாதவிடாய் சுகாதாரம் முதல் ஒட்டுமொத்த நல்வாழ்வு வரை – ZOY முன்னெடுக்கும் விழிப்புணர்வு முயற்சி!

6

பெண்களின் மாதவிடாய் பராமரிப்பைத் தாண்டி, அவர்களின் ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ZOY நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. ‘மாதவிடாய் காலத்தைத் தாண்டிய ஆரோக்கியம்’ (Wellness Beyond Your Period) என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ZOY நிறுவனத்தின் இணை நிறுவனரும் நடிகையுமான சமந்தா ரூத் பிரபு, நிறுவனத்தின் நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஃபிட் செஃப் நிறுவனரும் ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வுப் பயிற்சியாளருமான ஷிதிஜா நஹதா, விளையாட்டு மற்றும் முழுமையான தடுப்பு உணவியல் நிபுணர் ஷைனி சுரேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், முன்னணி மகளிர் மருத்துவ நிபுணர்களான டாக்டர் பத்மா ராமகிருஷ்ணன் மற்றும் டாக்டர் நரசா நாராயணி ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

பெண்களின் உடல்நலம் தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது. ஹார்மோன் சமநிலை, அந்தரங்கப் பகுதி சுகாதாரம், மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் பெண்களின் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஏற்படும் உடல்நல மாற்றங்கள் உள்ளிட்ட தலைப்புகள் இடம்பெற்றன. மாதவிடாய் காலப் பராமரிப்புடன் நின்றுவிடாமல், பெண்கள் தங்கள் உடல்நலத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

ZOY நிறுவனத்தின் நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தி பேசுகையில், ஜவுளித் துறையில் தனக்குள்ள 16 ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில், பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான மாதவிடாய் பராமரிப்புப் பொருட்களை வழங்கும் நோக்கில் நிறுவனத்தைத் தொடங்கியதாகத் தெரிவித்தார். பெண்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ற தயாரிப்புகளை வழங்குவதுடன், உடல்நலம் குறித்த விழிப்புணர்வையும் அதிகரிப்பது நிறுவனத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடிகையும் ZOY நிறுவனத்தின் இணை நிறுவனருமான சமந்தா ரூத் பிரபு பேசுகையில், பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்து போதிய விழிப்புணர்வைப் பெற வேண்டும் என்றும், தாங்கள் பயன்படுத்தும் மாதவிடாய் பராமரிப்புப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்துத் தெரிந்துகொண்டு, சிந்தித்துத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பெண்களின் மாதவிடாய் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மூலிகைகள் சேர்க்கப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், பாக்டீரியா எதிர்ப்புத் தொழில்நுட்பத்துடன் கூடிய நாப்கின்கள், மூலிகை வெல்னஸ் லைனர்கள், ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் உள்ளாடைகள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் கப் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை ZOY நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மாதவிடாய் காலப் பராமரிப்பை மட்டும் மையமாகக் கொள்ளாமல், பெண்களின் ஒட்டுமொத்த உடல்நலம், நல்வாழ்வு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான தயாரிப்புத் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.