கருணாஸ் – வெற்றி இணையும் ‘ரேவன்’ – உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் க்ரைம் த்ரில்லர்!

1

பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் செல்லமுத்து குப்புசாமி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரேவன்’. கருணாஸ் மற்றும் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற வெற்றி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் தொடக்கவிழா பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாணி போஜன், அனுமோல், ரவீணா, விஷ்வமித்ரன், ‘ராட்சசன்’ வினோத் சாகர், சரவணன் ஷக்கி, சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சேதுராஜன் ராஜகோபால் மற்றும் ஆர்.வி. சரண் ஆகியோர் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘ஆபிஸ்’ இணையத் தொடருக்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவரும், ‘பீட்ஷா 3’ திரைப்படத்திற்கும் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவருமான வே. வெற்றிவேல் சந்திரசேகர், ‘ரேவன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் வே. வெற்றிவேல் சந்திரசேகர் கூறுகையில், “‘ரேவன்’ ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படம். எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன் எழுதிய ‘படுகளக் காதை’ நாவலைத் தழுவி இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சுமார் 30 கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட ஒரு தொடர் கொலையாளி கைது செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தின் தாக்கமும் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. அந்தச் சம்பவத்தை அப்படியே பதிவு செய்யாமல், அதன் தாக்கத்தில் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறோம்.

இப்படத்தில் காக்கைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. காகத்தை நமது முன்னோர்களின் வடிவமாகப் பார்க்கும் நம்பிக்கை நமது பண்பாட்டில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. அந்த நம்பிக்கைக்கும் படத்தின் கதைக்கும் முக்கியமான தொடர்பு இருக்கிறது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் காக்கையைத் தத்ரூபமாக உருவாக்கிப் பயன்படுத்துகிறோம். இதைத் திரையில் பார்க்கும்போது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

க்ரைம் த்ரில்லருக்கான விறுவிறுப்பைத் தாண்டி, நமது சமூகத்தில் நீண்டகாலமாகப் புரையோடிப் போயிருக்கும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையையும் ‘ரேவன்’ அழுத்தமாகப் பேசுகிறது” என்றார்.

சென்னை, கோவை, ஈரோடு, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை விரைவில் நிறைவு செய்து, இந்த ஆண்டு இறுதியில் ‘ரேவன்’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

உண்மைச் சம்பவத்தின் தாக்கம், க்ரைம் த்ரில்லர் அம்சங்கள், பண்பாட்டு நம்பிக்கையின் பின்னணி மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்படும் காக்கை எனப் பல்வேறு அம்சங்களுடன் உருவாகும் ‘ரேவன்’, இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகரின் அறிமுகப் படமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.