பொங்கல் 2027 வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ‘வேட்டுவம்’ – உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

7

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம், பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தர்மன்’, ‘சேயோன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி வந்தாலும், அவற்றின் வெளியீட்டுத் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், பொங்கல் 2027 வெளியீட்டை முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ‘வேட்டுவம்’, அப்பண்டிகைக்கான திரையரங்கு வெளியீட்டுப் போட்டியில் களமிறங்கியுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘World of Vettuvam’ வீடியோ ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த வீடியோவிற்கு, தமிழில் இயக்குநர் பா. இரஞ்சித்தும், இந்தியில் பங்கஜ் திரிபாதியும், தெலுங்கில் ராணா டகுபதியும், மலையாளத்தில் சௌபின் ஷாஹிரும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் குரல் கொடுத்துள்ளனர்.

அப்போகலிப்டிக் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், வெவ்வேறு குழுக்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டிகள், மோதல்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதைக்களத்தைக் கொண்டுள்ளது. பாரம்பரியத் தற்காப்புக் கலைகளான அடிமுறை மற்றும் மல்லகம்ப் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் சண்டைக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காகப் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் முறையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆர்யா, தினேஷ், ஷபீர், ஷோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எஸ்.எஸ். மூர்த்தி கலை இயக்குநராகவும், ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவாளராகவும், செல்வா ஆர்.கே. படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள பான் இந்தியத் திரைப்படமான ‘வேட்டுவம்’, பிரம்மாண்டமான கதைக்களம், தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் தனித்துவமான உலகப் பின்னணியுடன் பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.