‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘எங்க காட்டுல மழை’, ‘சிக்கிக்கு சிக்கிகுச்சு’, ‘காக்டெயில்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த மிதுன் மகேஸ்வரன், தற்போது ‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் தயாராகியுள்ள இப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் டீசரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டார்.
காட்டு யானையும் பழங்குடி மக்களின் வாழ்வியலும்!
காட்டு யானையை மையமாகக் கொண்டு, அதே காட்டில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியல் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களைப் பேசும் கதைக்களத்தில் ‘அரிகொம்பன்’ உருவாகியுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
கதாநாயகியாக கேரளத்தைச் சேர்ந்த தேவிகா கிருஷ்ணன் நடித்துள்ளார். ‘திருடா திருடி’ படத்தின் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, மு. ராமசாமி, எதிர்நீச்சல் விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜய் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
காட்டுக்குள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கிராமங்கள்!
இப்படத்தின் உருவாக்கம் குறித்து இயக்குநரும் கதாநாயகனுமான மிதுன் மகேஸ்வரன் கூறுகையில், காட்டுக்குள் இரண்டு கிராமங்களைப் பிரம்மாண்டமாகச் செட் அமைத்து, அந்தக் கிராம மக்களின் வாழ்வியலையும் காட்டு யானையையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையுடன் படத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சசிகுமார் வெளியிட்டுள்ள டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம், வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.